குருவிடம் சீடன், “குருவே, கோபம் வந்தால் மனிதன் ஏன் கத்துகிறான்? கோபத்தில் ஒருவரை ஒருவர் இரைந்து பேசுவதன் காரணம் என்ன?” என்று கேட்டான்.
அதற்குக் குரு, “கோபம் கொண்டவன் முதலில் மன அமைதியையும் சமநிலையையும் இழக்கிறான். அதனால்தான் கத்திப் பேசுகிறான். மேலும், அடுத்த மனிதன் கோபம் கொண்டவனுக்கு மிக அருகிலேயே இருந்தும் மனம் அவர்களிடமிருந்து வெகு தூரம் விலகி விடுகிறது. அதனால் அவர்கள் எவ்வளவுக்குச் சினம் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு இரைந்து பேசுகிறார்கள்.
மாறாக, அன்புள்ளங்கள் இரண்டு கலந்து உறவாடும் போது மிகவும் மிருதுவாகப் பேசுகின்றன. ஏனெனில், அவர்களது உள்ளங்கள் மிக நெருக்கமாக உள்ளன. சொல்லப் போனால் இரு உள்ளங்களுக்கிடையே நெருக்கம்தான் அதிகம், இடைவெளியே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் அன்பு மேலிட்டால் அவர்களுக்கிடையேப் பேச்சே தேவையின்றிப் போய்விடும். வாக்கு வாதம் ஏற்பட்டால் உள்ளங்கள் தூர விலகி விடுகின்றன. அதனால் மறந்தும் துன்புறுத்தக் கூடிய கடும் சொற்களை ஒரு போதும் பேசாதீர்கள். அமைதியை ஒரு போதும் இழக்காதீர்கள். வாக்குவாதத்தைத் தவிருங்கள்”
என்று குரு கூறி முடித்தார்.