சோமன், சாமன் என்று இரண்டு விவசாயிகள். அவர்களுக்குள் ஒரு தகராறு.
சோமனது ஒரு பெரிய மூங்கில் கூடையை சாமன் திருடிவிட்டதாகப் புகார்.
பஞ்சாயத்து கூடியது. கிராமத் தலைவர் விசாரணைக்கு அமர்ந்தார்.
அந்தக் கூடைக்கு இருவருமே உரிமை கொண்டாடினர். கூடை பற்றி சாட்சியம் சொல்ல யாரும் இல்லை.
'என்ன செய்வது?' என்று யோசித்தார் தலைவர்.
சோமனிடம், ''நீ இந்தக் கூடையில் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் செல்வாய்'' என்று கேட்டார்.
அவன் 'அரிசி' என்று பதில் கூறினான்.
சாமனைக் கேட்ட போது, அவன் ''நான் எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன்'' என்று கூறினான்.
அப்போது தலைவர் கூறினார்: ''சரி, இந்தப் புகாருக்கு வெளிசாட்சி எதுவுமில்லை. நீங்களும் உண்மையைக் கூறப் போவதில்லை.
''இந்தக் கூடையைத் தான் சாட்சியாக விசாரிக்கப் போகிறேன்'' என்று கூறி, கூடையைப் பார்த்து, 'நீ யாருக்குச் சொந்தம்?' என்று கேட்டார்.
அங்கேக் கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியம். தலைவருக்கு புத்தி குறைந்து விட்டதா? என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
தலைவரோ மீண்டும் கூடையைப் பார்த்து, அதேக் கேள்வியை இரண்டு முறை கேட்டார். ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை.
உடனே அந்தத் தலைவர், ''ஏய் யாரங்கே? கூடை பதிலே சொல்ல மாட்டேன் என்கிறது. ஒரு தடி கொண்டு இந்தக் கூடையை நாலு சாத்து சாத்து'' என்று உரக்கக் கூறினார்.
அவருடைய உதவியாள் ஒருவன் ஓடி வந்து கூடையை நான்கு புறமும் நன்றாக அடித்தான். பிறகு அவர் ''கூடையை நகர்த்தி வை'' என்று கூறினார்.
கூடை முதலில் இருந்த இடத்தைப் பார்த்த அவர், ''சோமா, கூடை உன்னுடையதுதான் எடுத்துக் கொண்டு போ'' என்றார்.
அவையோருக்குத் திகைப்பு.
ஒருவர் மட்டும் பணிவுடன் தலைவரை நோக்கி, ''அது எப்படி?....'' என்று கேட்டார்.
''இதோ பாரய்யா, கூடை இருந்த இடத்தில் அடித்ததால் அரிசித் துகள்களும் நொய்யும் கொட்டிக் கிடக்கின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா? கூடையை யார் பயன்படுத்தியிருப்பார் என்று'' தலைவர் கூறினார்.
பிறகு, சாமனுக்குப் பொய் சொன்னதற்காக, இரண்டு சவுக்கு அடி கொடுக்க உத்தரவிட்டார்.
சோமன் சந்தோஷத்தோடு கூடையைத் தூக்கிச் சென்றான்.
மக்கள் கிராமத் தலைவரின் அறிவைப் புகழ்ந்த படி கலைந்து சென்றனர்.