பரதன், சத்ருக்னன், வசிஷ்டர், தாய்மார்கள் மூவர், படைவீரர்கள், சேனாதிபதிகள், மந்திரிகள் மற்றும் அயோத்தி மக்கள் அனைவரும் ராமனின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரின் வருகையைப் பற்றி குகன் ராமனிடம் சென்று எடுத்துரைத்தான். ஸ்ரீராமன் லட்சுமணனுடனும் குகனுடனும் சென்று அனைவரையும் வரவேற்க முன் வந்தான்.
முதலில் ராமன் குலகுரு வசிஷ்டரின் பாதங்களைப் பணிந்தான். வசிஷ்டரின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டுமென்று குகன் குதூகலமாக இருந்தான்.
ஆனால், காட்டுவாசியான அவனுக்கு ஜகம் போற்றும் முனிவரின் அருகில் செல்வதற்குத் தயக்கமாக இருந்தது.
அதன் காரணமாக வசிஷ்டரின் அருகில் செல்ல முயற்சிப்பதும், பின்னோக்கிச் செல்வதுமாக இருந்தான். அவனது தடுமாற்றத்தை வசிஷ்டர் கவனிக்காவிட்டாலும் ராமன் கவனித்தான்.
தான் அருகில் போய் காலைத் தொட்டு வணங்குவதை வசிஷ்டர் விரும்புவாரோ, மாட்டாரோ! தன்னால் அவருக்குத் தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்று குகன் தூரத்திலிருந்தபடி வசிஷ்டரை வணங்கினான்.
அவரும் அங்கிருந்தபடியே ஆசீர்வதித்தார்.
அந்தப் பக்தனின் செய்கையைக் கவனித்த ராமன், குகனின் மனதிலுள்ள ஆசையையும் தடுமாற்றத்தையும் புரிந்து கொண்டு ஓர் வழி செய்தான்.
குகனின் கையைப் பற்றிக் கொண்டு நேரே வசிஷ்டரின் அருகில் சென்றான்.
''குருதேவா! இவன் என் இனிய நண்பன் குகன்'' என்றான்.
வசிஷ்டருக்கு ராமனின் எண்ணம் புரிந்துவிட்டது.
உடனேக் குகனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார்.
வேத மந்திரங்களிலும், சாத்திரங்களிலும் கரைகண்டவரான வசிஷ்டரும், காட்டில் வேட்டையாடும் குகனும் அப்படி அன்பால் சேர்ந்திருப்பதைப் பார்த்து ராமனின் கண்கள் பனித்தன.