ஒரு ராஜா நாட்டு மக்களின் நிலையை நேரில் தெரிந்துகொள்ள விரும்பினார்.
அதன் பொருட்டு ஒரு நாள் அவர் ஊரைச் சுற்றிப் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
ஓர் இடத்தில் தறிநெசவு வேலை மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
பெரியவர் ஒருவர் தறியில் நெசவு வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர் பக்கத்தில் ஓர் அழகான பெண் உட்கார்ந்து நூல் சுற்றிக் கொண்டிருந்தாள்.
ராஜா அந்த பெரியவரைப் பார்த்து, “யார் இந்தப் பெண்?'' என்று விசாரித்தார்.
ராஜா இப்படிக் கேட்டதும் பெரியவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஏனென்றால், உட்கார்ந்திருந்தவள் அவரது மகள்!
''அரசே, இவள் என் மகள். வேகமாக நூல் திரிக்கக் கூடியவள். வைக்கோலை எடுத்து இவள் திரித்தால் கூட அதெல்லாம் தங்க இழையாக வெளிவரும். அப்படி ஒரு ராசி இவளுக்கு!'' என்று பெருமைப் பொங்க பெரியவர் அரசரிடம் கூறினார்.
ராஜா அதைக் கேட்டதும் அசந்து விட்டார்.
“அப்படியா! இவ்வளவு அழகும் சாமர்த்தியமும் உள்ள இந்தப்பெண் என்னுடன் வரட்டும்.... இவளை நான் என்னுடைய மருமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார் அரசர்.
அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை... 'ஏதோ கொஞ்சம் பெருமையாகச் சொல்லப் போக, அது இப்படி ஆகிவிட்டதே!' என்று அவர் கவலைப்பட்டார்.
இருந்தாலும் ராஜா பேச்சைத் தட்ட முடியுமா? வேறு வழி இல்லாமல் பெரியவர் தன் மகளை அரசருடன் அனுப்பி வைத்தார்.
ராஜா அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்து வந்தார். அங்கே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டார்.
அந்த அறை முழுவதும் வைக்கோலைக் கொண்டு வந்து போட்டு நிரப்பினார்கள். அதோடு மூன்று ராட்டைகளும் வேறு கொண்டு வந்து வைத்தார்கள்.
“நாளைக்குப் பொழுது விடிவதற்குள் நீ இந்த வைக்கோலையெல்லாம் தங்க இழைகளாக நூற்றுக் காட்ட வேண்டும். நாளைக்குக் காலையில் நான் வந்து இந்த அறையின் கதவைத் திறப்பேன். அப்போது உன் தந்தை கூறியது போல் இந்த வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ உயிர் தப்ப முடியாது!" என்று அரசர் உத்தரவு போட்டு விட்டுச் சென்றார்.
பாவம் அந்தப் பெண். மிகவும் பயந்து விட்டாள். 'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!' என்ற பெரியோர் வாக்கு அவளது நினைவுக்கு வந்தது.
அதனால் அவள், "இறைவா, எனக்கு நல்ல ஒரு வழியைக் காட்டு....'' என்று பகல் முழுவதும் அழுது கொண்டேப் பிரார்த்தனை செய்தபடியே உட்கார்ந்திருந்தாள். இரவு முழுவதும் தூக்கம் வராமல் அழுதபடியே இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். அவளது பிரார்த்தனை வீண் போகவில்லை.
மறுநாள் விடியற்காலையில் யாரோ அறையின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.
பயந்து கொண்டே அவள் எழுந்து சென்று திறந்தாள்.
திறந்து பார்த்தால்.....வெளியிலே மூன்று அவலட்சணமான பெண்கள் நின்றிருந்தார்கள். ஒருத்திக்குக் கால் அகலமாக முறம் மாதிரி இருந்தது... இன்னொருத்திக்குக் கட்டைவிரல் கரண்டி மாதிரி பெரியதாக இருந்தது... மூன்றாவது பெண்ணுக்கு உதடு தடித்து ரப்பர் மாதிரி தொங்கிக் கொண்டிருந்தது.
''யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று அந்தப் பெண் கேட்டாள்.
‘’நாங்கள் உனக்கு உதவிச் செய்வதற்காக வந்திருக்கிறோம்'' என்று சொல்லிக் கொண்டே மூன்று பெண்களும் உள்ளே வந்தார்கள். உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்திற்குள் உள்ளே இருந்த வைக்கோலையெல்லாம் தங்க இழைகளாக மாற்றிக் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்கள்.
காலையில் ராஜா வந்தார்.
பார்த்தார். ''ஆகா...அருமை!'' என்றார்.
மேலும் அவர், 'இன்னும் கொஞ்சம் வைக்கோலைக் கொண்டு வந்து இந்த அறையில் போடுங்கள்' என்று வேலைக்காரர்களிடம் கூறினார்.
"இந்த வைக்கோலையும் இன்றைக்குத் தங்கமாக மாற்றிவிடு... நாளை மறுநாள் உனக்கும் இளவரசனுக்கும் திருமணம்!'' என்று அரசர் அந்த அப்பாவிப் பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றார்.
அன்றைய இரவும் அந்த மூன்று பெண்கள் வந்தார்கள்.... வைக்கோலை பொன் இழைகளாக மாற்றினார்கள்.... புறப்பட்டார்கள்.
அந்தப் பெண் அவர்கள் காலில் விழுந்து வணங்கி, ''என் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!'' என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.
அதற்கு அவர்கள், ''பயப்படாதே! நீ விரும்பினால் எங்களுக்கு ஓர் உதவி செய்யலாம். உன்னுடைய திருமணத்திற்கு நாங்கள் மூன்று பேரும் வருகிறோம். நீ எங்களை வரவேற்று அரசரிடமும் இளவரசரிடமும், 'இவர்கள் என்னுடைய பெரியப்பாவின் பெண்கள்' என்று சொல்லி எங்களை அறிமுகப்படுத்தி வை. நாங்கள் விருந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம்'' என்றார்கள்.
"இதைக் கேட்டதும் இந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியுடன், ''சரி, அப்படியே செய்கிறேன்' என்று ஒப்புக்கொண்டாள்.
திருமண நாள் வந்தது. திருமணம் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அனைத்து நாடுகளிலிருந்தும் அரசர்கள் தங்கள் பட்டத்து ராணிகளுடன் வந்திருந்தார்கள்.
அந்த மூன்று அவலட்சணமான பெண்களும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
''யார் இவர்கள்?'' என்று அரசர் கேட்டார்.
''என் பெரியப்பா பெண்கள்'' என்றாள் அந்த நெசவாளியின் மகள்.
அரசர் அவர்களிடம், ''காலும் உதடும் கட்டைவிரலும் ஏன் உங்களுக்கு இப்படி அவலட்சணமாக இருக்கின்றன?'' என்று விசாரித்தார்.
அதற்கு அந்தப் பெண்கள் பதில் கூறினார்கள்
''என்ன செய்வது: ஓயாமல் வைக்கோலை நூற்று ஒருத்தியின் கட்டைவிரல் அப்படி கரண்டி மாதிரி ஆகிவிட்டது! நாக்கில் தொட்டுத் திரித்து இன்னொருத்தியின் உதடு அப்படியாகிவிட்டது! காலால் கட்டையை அழுத்தித் தறி போட்டதால் இன்னொருத்தியின் கால் இப்படி ஆகிவிட்டது! உங்கள் மருமகளாக வந்திருக்கும் இந்தப் பெண் அந்த மூன்றையுமே செய்யத் தெரிந்தவள்... இவளுக்கு இன்னும் கொஞ்சம் நாட்களில் என்ன ஆகப் போகிறதோ!'' என்றார்கள்.
அவ்வளவுதான்! ராஜா பயந்து விட்டார்.
“அம்மா என் மருமகளே! இன்று முதல் நீ இளவரசனின் மனைவி.... நீ எப்போதும் அழகாக இருக்க வேண்டும். ஆதலால் நீ இனிமேல் வைக்கோலைத் திரிக்கவே கூடாது!'' என்று அரசர் உத்தரவிட்டார்.
அவளை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிய அந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.