அந்த நாட்டின் அரசருக்கும் மந்திரிக்கும் இடையே 'பொது அறிவு சிறந்ததா? படித்த அறிவு சிறந்ததா?' என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது.
அரசன், பொது அறிவே தேவை என்று வாதிக்க, அமைச்சருக்கோ கற்ற கல்விதான் பயன் தரும் என்ற நிலை.
முடிவில் அரசன், ''அமைச்சரே! உமக்கு 3 கேள்விகள் தருகிறேன். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமல்லவா! ஏழு நாட்களில் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் என் 3 கேள்விகளுக்குச் சரியான பதில் தர வேண்டும். இது என் கட்டளை'' என்றார்.
சரி என்று கூறி விடைபெற்றுச் சென்றார் அமைச்சர்.
ஆனால், அந்த மூன்றுக் கேள்விகளுக்கு விடை மட்டும் என்ன செய்தாலும் கிடைக்கவில்லை! அவரால் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. ஆறு நாட்களும் சென்றுவிட்டன.
அவையினருக்கும் பயம் வந்துவிட்டது. நாளை மன்னனைச் சந்தித்தாக வேண்டும்.
ஆற்றங்கரை ஓரத்தில் சென்று கொண்டிருந்த அமைச்சரிடம் ஒரு சலவைத் தொழிலாளி வந்தான்.
ஐயா, ''என்னமோ கவலையாய் இருக்கிறீர்களாமே. நான் உங்களுடன் நாளை அரசவைக்கு வரட்டுமா'' என்றான்.
'இந்தச் சலவைத் தொழிலாளிஎன்ன உதவி செய்ய முடியும் என்று எண்ணினாலும், எதற்கும் வரட்டுமே நமக்கோ பதிலே தெரியவில்லை' என்று எண்ணி, அதற்கு ஒத்துக் கொண்டார் அமைச்சர்.
அரசவையில் அவையினர் அனைவரும் அமைச்சருடன் உள்ளே வரும் சலவைத் தொழிலாளியையும் கழுதையையும் வியப்புடன் பார்த்தனர்.
முதல் கேள்வி சலவைத் தொழிலாளி முன் வைக்கப்பட்டது!
விண்ணில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
அந்தச் சலவைத் தொழிலாளி, “என் கழுதையின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அத்தனை நட்சத்திரங்கள் உள்ளன” என்றான்.
அரசன் “அதெப்படி சொல்கிறாய்?” என்றான்.
அந்தச் சலவைத் தொழிலாளி, “நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் மஹாராஜா” என்றான்.
அடுத்து இரண்டாவது கேள்வியாக, “பூமியின் மையம் எங்குள்ளது?” என்று அரசன் கேட்டான்.
சலவைத் தொழிலாளி, தனது கழுதையின் முதுகில் உட்கார்ந்து கொண்டு பலமுறை சுற்றினான். சட்டென்று கீழே குதித்து ஒரு குச்சியினால் ஓர் இடத்தைக் காட்டி, ''மகாராஜா! இதுதான் பூமியின் மையம்?'' என்றான்.
''எப்படிச் சொல்கிறாய் நீ?''என்றான் அந்த அரசன்.
உடனே, ''ராஜா, நீங்களே அளந்து கொள்ளுங்கள் இரண்டு பக்கத்தையும்!'' என்றான்.
அவையில் அமைதி! எப்படி ராஜாவால் பூமியை அளக்க முடியும் என்று!
அடுத்து மூன்றாவது கேள்வியாக, “உலகில் எத்தனை பேர் உள்ளனர்? அதில் ஆண்கள் எவ்வளவு? பெண்கள் எவ்வளவு?” என்று கேட்டான் அரசன்.
உடனேச் சலவைத் தொழிலாளி, “மகாராஜா, ஆண்கள், பெண்கள் எல்லாம் சரி! இரண்டிலும் சேராதவர்களை எந்தக் குழுவில் வைத்து எண்ணுவது? சொல்லுங்கள் அரசே!” என்றான்.
சாதாரணமான வண்ணானுக்கு எத்தனைப் பொது அறிவு என்று வியந்தான்.
அதன் பிறகு, ''பார்த்தீரா அமைச்சரே! இதனால்தான் சொன்னேன் கற்ற கல்வியைவிட பொது அறிவுதான் சிறந்தது என்று!'' என்றான்.
அதனைத் தொடர்ந்து, அந்தச் சலவைத் தொழிலாளிக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தான்.