நயவஞ்சகம் செய்து பிழைப்பதே அவனது தொழில்.
ஒரு நாள் அதிகாலையில் அவனது உயிருக்கு ஆபத்து என்று ஒரு கனவு வந்தது. திடுக்கிட்டு எழுந்தான்.
இன்று மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
காலையில் வெளியில் சென்றான்.
வழியில் பரிச்சயமில்லாத ஒருவர் இவனிடம் வந்தார்.
அவர் யார்? யமதூதன்தான்!
யமதூதன், தான் கொண்டு வந்திருந்த பட்டியலைப் பார்த்து இவனிடம், ''ஒரு வருடத்திற்குள் குறிப்பிட்ட 14 நபர்களை யமலோகத்திற்கு அழைத்துச் செல்வதே எனக்குத் தரப்பட்ட பணி. நீதான் முதல் ஆள். என்ன, போகலாமா?'' என்று கேட்டார்.
தனது கனவு பலித்துவிடுமோ என்ற பயம் ஒரு புறம் அவனுக்கு.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி யமதூதனிடம், ''தாராளமாக! ஆனால் போகும் முன்பு உங்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டுமே. வாங்க, அந்த ஹோட்டல்ல ஒரு காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்'' என நயவஞ்சகமாகப் பேசினான்.
யமதூதனும் அவனது பேச்சில் 'மயங்கி'ச் சம்மதித்தார். ஓட்டலின் உள்ளே யமதூதனை அமர வைத்தான். காபி வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான். இரண்டு கோப்பைகளை வாங்கிக் கொண்டான்.
யாருக்கும் தெரியாதபடி ஜாக்கிரதையாக, ஒரு காபியில் ஒரு பொடியைக் கலக்கினான். அதை யமதூதனிடம் தந்துவிட்டு மற்றொன்றை அருந்தத் தொடங்கினான்.
அவன் எதிர்பார்த்தபடியே யமதூதன் சிறிது நேரத்தில் காபியைக் குடித்து உண்மையாகவே மயக்கமடைந்தார்.
உடனே அவன், அவரது பையில் இருந்த பட்டியலில் தன் பெயரை அடித்தான். அதைக் கடைசியில் எழுதி மீண்டும் பைக்குள்ளேயே வைத்துவிட்டான். பிறகு ஒன்றும் தெரியாதவன் போல அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் கண் விழித்த யமதூதன் அவனிடம், ''அடடா, களைப்பில் தூங்கிவிட்டேனே! ஆனாலும் உன் பேச்சில்தான் என்ன ஓர் அன்பு! ரொம்ப சந்தோஷம். எனக்கு காபி வாங்கித் தந்ததுமில்லாமல் தூங்கிவிட்ட போது என் கூடவே இருந்துள்ளாய். பதிலுக்கு உனக்கு நான் என்ன செய்ய முடியும்? என் கடமையைச் செய்யும் அதே வேளையில் ஓர் உதவி மட்டுமே உனக்குச் செய்யலாம்” என்றான்.
''இப்பட்டியலிலுள்ள வரிசையில் உனக்காகக் கடைசிப் பெயரிலிருந்து ஆரம்பிக்கிறேனே!'' என்று கூறிப் பட்டியலை எடுத்தார் யமதூதன்!
அவன் முகத்தில் ஈயாடவில்லை!!