ஓர் அராபியன் காட்டு வழியேத் தன்னந்தனியே சென்று கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் எதிரேச் சாத்தான் தோன்றினான்.
"நான் செய்யச் சொல்லும் மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தை நீ செய்ய வேண்டும். இல்லையேல் உன்னை இங்கேயேக் கொன்று விடுவேன்'' என்றான் சாத்தான்.
“என்ன பாவங்கள்?'' என்று நடுங்கிக் கொண்டேக் கேட்டான் அராபியன்.
"இன்னும் சிறிது நேரத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இங்கே வருவாள். நீ அந்தப் பெண்ணைக் கெடுக்க வேண்டும். இல்லையேல் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் என் கையிலிருக்கும் இந்த மதுவைக் குடிக்க வேண்டும்'' என்றான் சாத்தான்.
சிறிது நேரத்தில் சாத்தான் சொன்னபடியே ஓர் அழகான பெண், குழந்தையுடன் அங்கே வந்து சேர்ந்தாள்.
அராபியன் சிந்தித்தான். 'பெண்ணைக் கெடுப்பது பாவம், குழந்தையைக் கொல்வது அதைவிடப் பெரும்பாவம், ஆகவே மதுவைக் குடித்து விடுவோம்' என்று நினைத்துச் சாத்தானின் கையிலிருந்த மதுவை வாங்கிக் குடித்தான்.
மது போதையில் அறிவு மயங்கிய அவன், அந்தப் பெண்ணைக் கெடுத்தான். அப்பொழுது குழந்தை அழுதது. கோபத்தால் குழந்தையையும் தரையில் வீசிக் கொன்றான்.
மது அவனை மற்ற பாவங்களையும் செய்யச் செய்துவிட்டது.