முன்னொரு காலத்தில் காட்டில் துறவி ஒருவர் தவம் செய்து வந்தார்.
அவர் தவம் செய்யும் இடத்திற்கு அருகில் பொய்கை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான மலர்கள் மலர்ந்து, இனிய மணம் வீசிக் கொண்டிருந்தன.
துறவிக்குத் தாமரைப் பூவின் மணத்தை நுகர்ந்து பார்க்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.
உடனேப் பொய்கையில் இறங்கினார் துறவி. நன்றாக மலர்ந்திருந்த ஒரு தாமரை மலரைத் தன் பக்கம் இழுத்து நுகர்ந்தார்.
அப்பொழுது அங்குத் தோன்றிய ஒரு தேவதை துறவியைப் பார்த்து கலகலவென்று சிரித்தது.
"துறவியே! பூ மணத்தைத் திருடுகிறாயே, இது சரியா?'' என்று கேட்டது.
இதைக்கேட்ட துறவி திடுக்கிட்டார். “நான் மலரைப் பறிக்கவில்லை. தண்டைப் பிடுங்கவில்லை. மலருக்கு ஏதும் நேராமல் அதன் மணத்தை மட்டுமே நுகர்ந்தேன். என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறாயே? இது நியாயமா?'' என்று கேட்டார்.
தேவதை அதற்குப் பதில் ஏதும் பேசவில்லை . துறவி மனவருத்தத்தோடு கரை ஏறினார்.
சிறிது நேரத்தில் வேறு ஒருவன் அங்கே வந்தான். அவன் தொழிலே தாமரை இலைகளையும் மலர்களையும் பறித்து விற்பதுதான்.
அவன் பொய்கைக்குள் இறங்கினான்.
அங்கிருந்த எல்லாத் தாமரை மலர்களையும் இலைகளையும் பிடுங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான்.
இதைப் பார்த்த துறவியால் தாங்க முடியவில்லை.
தேவதையைப் பார்த்து, ''நான் மலருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல், அதன் மணத்தை மட்டுமே நுகர்ந்தேன். என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டினாய். ஆனால் இவனோ எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு செல்கிறான். என்ன கொடுமையான செயல் இது. ஆனால் நீயோ ஏதும் பேசாமல் இருக்கிறாயே? என்னைத் திருடன் என்று அழைத்த நீ இவனை மட்டும் குறை சொல்லாதது ஏன்?" என்று கேட்டார்.
அதற்குத் தேவதை பின் வருமாறு பதில் கூறியது:
“அருளே வடிவான துறவி சிறு தவறும் செய்யக்கூடாது. அப்படித் தவறு நிகழுமாயின் அவர்களைத் தடுத்து நல்வழிப்படுத்துவது என் கடமை. மற்றவர்களைப் பற்றி நான் பேசுவதில்லை, கவலைப்படுவதுமில்லை”