கப்பலில் முதன்முதலாகப் பயணம் செய்தார் ஒருவர். 'பரந்து கிடக்கும் கடலில் எப்பொழுது வேண்டுமானாலும் கப்பல் மூழ்கி விடலாம். பயணம் வெற்றியாக அமைந்து ஊர் போய்ச் சேர்வோம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கப்பலிலேயே எப்பொழுதும் பணிபுரிகிற மாலுமிகளின் நிலை இதைவிட மோசம்' என்று நினைத்தார் அவர்.
அங்கிருந்த மாலுமி ஒருவரை அழைத்து அவர், ''உன் தந்தையார் என்ன பணி புரிந்தார்?'' என்று கேட்டார்.
''என் தந்தையாரும் என்னைப் போல் கப்பலின் மாலுமியாகப் பணிபுரிந்தார். ஒரு நாள் அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதால் அவர் இறந்துவிட்டார்'' என்றான்.
''சரி! உன் தந்தையாரின் தந்தையார் என்ன செய்தார்?'' என்று கேட்டார் அவர்.
“அவரும் மாலுமியாகத்தான் பணி புரிந்தார். அவரும் கப்பலோடு மூழ்கி இறந்து போய்விட்டார்'' என்று பதில் சொன்னான் மாலுமி.
''என்ன? உன் தந்தையாரும் அவர் தந்தையாரும் கப்பலில் பயணம் செய்யும்போது இறந்துவிட்டார்கள் என்கிறாய். நீயும் மாலுமியாக இருக்கிறாய். கடலில் மூழ்கி இறந்துவிடுவோம் என்ற அச்சம் உனக்குச் சிறிது கூட இல்லையா?'' என்று கேட்டார்.
“உங்கள் தந்தையார் எப்படி இறந்தார்?'' என்று கேட்டார் மாலுமி.
“படுக்கையில் படுத்திருக்கும் போது.''
''அவருடைய தந்தையார் எப்படி இறந்தார்?''
"அவரும் படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் இறந்தார்''
“உங்கள் தந்தையாரும், அவர் தந்தையாரும் படுக்கையில் படுத்திருக்கும் போதுதான் இறந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி அச்சமில்லாமல் படுக்கையில் படுத்து உறங்குகிறீர்கள்?'' என்று கேட்டான் மாலுமி.
அப்பொழுதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.
“உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு நீங்கியேத் தீரும். நமக்கு உரிய கடமையைச் செய்துகொண்டு அச்சமின்றி வாழ்வதே மேலான வாழ்க்கை” என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.