சீதையை ராவணன் கவர்ந்து சென்றதை அறிந்த பின்னர், 'ஸ்ரீராமபிரான் தமது வானர சேனையுடன் இலங்கைக்குச் செல்வதற்காகக் கடலில் பாலம் அமைக்க வேண்டியிருந்தது. வானரங்கள் பெரிய கற்களை எடுத்து வந்து அதன் மேல் 'ராம்' என்று எழுதி அவற்றைக் கடலில் எறிய, அவை கடலில் மிதந்து பாலமாக ஆயிற்று. இந்த அதிசயத்தை அறிந்த ராவணனுடைய சேனைகள் மிரண்டு போய்விட்டன.
பாலம் அமைக்கப்பட்ட விதத்தை அறிந்த ராணி மண்டோதரி தன் கணவன் ராவணனிடம், “இனியும் காலம் தாழ்ந்து விடவில்லை. சீதையை ராமனிடம் கௌரவமாக ஒப்படைத்து விடுங்கள். ராமன் என்ற பெயர் எழுதப்பட்ட கற்களேப் பாலமாக அமைந்துவிட்டன என்றால், அந்த ராமன் சாதாரண மனிதனல்ல" என்றாள்.
ஒரு புறம் தன் சேனைகள் மிரண்டு நிற்கும் காட்சி; மறுபுறம் மண்டோதரியின் உபதேசம். இரண்டையும் நினைத்துப் பார்த்த ராவணன், “இது என்ன அதிசயம்? நானும் பாலம் அமைத்துக் காட்டுகிறேன்'' என்று கூறி ஒரு கல்லை எடுத்து அதில் தன் பெயரை எழுதிக் கடலில் எறிந்தான். என்ன ஆச்சரியம், அந்தக் கல்லும் கடலில் மிதந்தது! இதைப் பார்த்ததும் ராவணனுடைய சேனைகள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன.
ராணி மண்டோதரி ராவணனிடம், ''உங்கள் சக்தியைத் தவறாக நான் மதிப்பிட்டு விட்டேன். மன்னியுங்கள்'' என்றாள்.
பிறகு மாளிகைக்குச் சென்ற ராவணன் மண்டோதரியிடம் தனியாகப் பேசுகையில், “நான் அந்தக் கல்லில் என் பெயரை எழுதியது என்னவோ உண்மை. ஆனால் அதைக் கடலில் எறியும் போது 'ராமன் மீது ஆணை! இந்தக் கல் மூழ்கக் கூடாது' என்று மனதில் எண்ணியே எறிந்தேன். கல் மிதந்துவிட்டது! ஒருவரிடமும் இதைச் சொல்லி விடாதே'' என்றான்.