கோசல நாட்டில் காதி என்னும் பெயருடைய அந்தணர் இருந்தார். அவர் சிறந்த புத்திமான். சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர். நல்லொழுக்கம் உடையவர். அவருக்கு வைராக்கியம் ஏற்படவே காட்டுக்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்.
பகவானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர, அவருக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை. ஆகவே, ஒரு குளத்திலுள்ள நீரில் நின்று கொண்டு கடுந்தவம் இயற்றினார்.
எட்டு மாதகாலம் அவர் கடுந்தவம் இயற்றிய பிறகு பகவான் விஷ்ணு அவர் முன் தோன்றினார்.
`உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்?'' என்றார்.
வேதாந்த விஷயங்களைப்பற்றி வெகு நாளாகக் காதி சிந்தனை பண்ணிச் சிந்தனை பண்ணி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆகவே பகவானைப் பார்த்து, ``இந்தப் படைப்பையே மாயை மூடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார்களே அந்த மாயையை நான் பார்க்க வேண்டும்'' என்று கேட்டார்.
''அப்படியேப் பார்ப்பாய்'' என்று சொல்லி விட்டு, பகவான் மறைந்தார்.
ஒரு நாள் காதி குளத்தில் மூழ்கி ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று மந்திரம் ஞாபகம் வரவில்லை. அதோடு அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது.
வனத்தில் இருந்த தாம் வீடு திரும்பி விட்டதாகவும், அங்கே தாம் இறந்து கிடப்பதாகவும், அதை அவருடைய சூட்சுமசரீரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார்.
உறவினர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள். கடைசியில் உடலை எடுத்து மயானம் சென்று அதைத் தகனம் செய்தார்கள்.
சூட்சும உடலில் இருந்த காதி உடனே ஒரு சண்டாள ஸ்திரீயின் கர்ப்பத்தில் புகுந்தார். சில நாட்களில் அவர் அந்த ஸ்திரீயின் மகனாகப் பிறந்தார்.
ஆனால், உண்மையில் இந்தக் கனவை அவர் கண்டு கொண்டிருந்த சமயத்தில் காட்டில் அந்தக் குளத்தின் தண்ணீரில் மூழ்கியபடிதான் இருந்தார்.
சண்டாள ஸ்திரீக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்குக் கடஞ்சன் என்று பெயர் வைத்தார்கள்.
கடஞ்சன் பெரியவன் ஆனதும், ஒரு சண்டாளப் பெண்னை மணந்தான். அவனுக்கு நிறையக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை வைத்துக் கொண்டு அவன் இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கிராமத்தில் அம்மை நோய் கண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாரும் மடிந்துவிட, கடஞ்சன் பைத்தியம் பிடித்தவன் போல ஊர் ஊராக அலைய ஆரம்பித்தான்.
கடைசியில் கீரதேசம் என்னும் நாட்டை அடைந்தான். அவன் போன சமயம் அந்த நாட்டின் அரசன் மரணமடைந்துவிட்டதால், புது அரசனைக் கண்டுபிடிப்பதற்காகப் பட்டத்து யானையை வெளியில் விட்டிருந்தார்கள். அது யாரைத் தூக்கிக்கொண்டு வருகிறதோ அவன்தான் அரசன்.
பட்டத்து யானை கடஞ்சனைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு அரண்மனை திரும்பவே, அவன் அந்த நாட்டு அரசனானான். ஆனால் அவன் யாரிடமும் தான் சண்டாள குலத்தில் பிறந்தவன் என்றோ, தன் பெயர் கடஞ்சன் என்றோ சொல்லிக் கொள்ளவில்லை.
எட்டு வருடகாலம் அவன் அந்த நாட்டு அரசனாக விளங்கினான். பல ராணிகளைக் கல்யாணம் செய்து கொண்டான்.
ஒரு நாள் அந்த நாட்டுச் சண்டாளர்கள் எல்லாரும் சேர்ந்து ஓர் உற்சவம் கொண்டாடினார்கள். எல்லாரும் ஆடிப்பாடிக் கொண்டு கூட்டமாகத் தெருவில் வந்தார்கள்.
வேடிக்கை பார்ப்பதற்காக அரசன் கடஞ்சன் அரண்மனைக்கு வெளியே வந்து நின்றான்.
அப்பொழுது சண்டாளர் கூட்டத்தில் ஒரு கிழவர் இருந்தார். அவர் கடஞ்சன் பிறந்த கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் கடஞ்சனைக் குழந்தைப் பருவத்திலிருந்தேத் தெரியும்.
அதனால் கடஞ்சனைப் பார்த்து, ``என்னடா கடஞ்சா! உன்னைக் காணோம் என்றல்லவா பார்த்தேன்! நீ இங்கேதான் அரசனாக இருக்கிறாயா? அப்படியானால் நீ அதிர்ஷ்டசாலிதான்டா! சண்டாளனுக்கு அரசப்பதவி கிடைக்க வேண்டுமென்றால் நீ எத்தனை அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும்!'' என்றார்.
அதைக் கேட்டதும், அந்த நகரத்து மக்கள் எல்லாருக்கும் தங்கள் அரசன் சண்டாளன் என்று தெரிய வந்தது.
`ஒரு சண்டாளன் கையிலா நாம் இத்தனை நாளும் சாப்பிட்டோம்? அவனோடா சேர்ந்து பழகினோம்?' என்று அந்த ஊர் அந்தணர்கள் வருத்தப்பட்டார்கள். உடனே எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானம் பண்ணி, ஒரு சிதை மூட்டி அதில் விழுந்து உயிர்விட்டார்கள்.
அதைக் கண்ட கடஞ்சன், `நம்மாலன்றோ இத்தனை பேரும் உயிர்விட்டார்கள்?' என்று வருத்தப்பட்டு, தானும் அந்தச் சிதையில் விழுந்து உயிர்விட்டான்.
கடஞ்சனைத் தீ எரிக்க ஆரம்பித்த அதே கணம் இங்கு அந்தணர் காதி, நதியில் மூழ்கினவர் வெளியே எழுந்தார்.
அவர் நதியில் மூழ்கி எழுந்து ஒரு நொடிகூட ஆகியிருக்காது. இத்தனை சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.
`இரவில்தான் இது' போலக் கனவு காண்பார்கள். நாம் நதியில் ஒரு நொடி மூழ்கி எழுவதற்குள் இப்படிக் கனவு கண்டுவிட்டோமே!'' என்று ஆச்சரியப்பட்டார்.
இப்படிச் சில நாட்கள் கழிந்ததும் ஒருநாள் இவருக்குத் தெரிந்த ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மிகவும் இளைத்திருந்தார்.
அவரைப் பார்த்து காதி, ''ஏன், இவ்வளவு துரும்பாக இளைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த அந்தணர், ''அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்! நான் சிறிது காலத்திற்கு முன் கீரதேசம் என்று அழைக்கப்படும் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் எல்லோரும் என்னை அன்பாக வரவேற்று உபசரித்தார்கள். அப்பொழுது ஒரு நாள் அந்த நாட்டை ஒரு சண்டாளன் எட்டு வருட காலம் ஆண்டான் என்றும், அது தெரிந்ததும் அந்த ஊர் அந்தணர்கள் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர் என்றும், அந்தச் சண்டாள அரசனும் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்றும் கேள்விப்பட்டேன். அதனால் அந்த நகரில் இருக்கப் பிடிக்காமல் அதற்குப் பிராய்ச்சித்தம் செய்து கொள்வதற்காக நான் பிரயாகை சென்றிருந்தேன். அப்படி அலைந்துதான் நான் இளைத்துவிட்டேன்!'' என்று சொன்னார்.
அதைக் கேட்டதும் காதி ஆச்சரியப்பட்டு, ``உண்மையில், கீரதேசம் என்ற ஒரு நாடு இருக்கிறதா?'' என்று கேட்டார்.
``நான் அங்கு இருந்தேன் என்று சொல்லுகிறேன், இருக்கிறதா என்று கேட்கிறீரே!'' என்றார் அந்த அந்தணர்.
அவர் சென்ற பிறகு, காதி எங்கெல்லாமோ அலைந்து, கடைசியில் கடஞ்சன் என்கிற சண்டாளன் பிறந்த கிராமத்தைக் கண்டுபிடித்தார்.
அங்கு விசாரித்ததில், கடஞ்சன் என்ற ஒரு சண்டாளன் அங்கு இருந்ததாகவும், அவனுடைய மனைவி மக்கள் வைசூரியினால் இறந்தார்கள் என்றும், அதன் பிறகு அவன் எங்கோ சென்றுவிட்டான் என்றும் கேள்விப்பட்டார்.
தாம் கனவில் கண்டது எப்படி நனவாக இருக்க முடியும்? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே கீரதேசம் என்று ஒரு நாடு இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டு அந்த நாட்டைக் கண்டுபிடித்தார்.
அங்கே சென்றால், ஒரு சண்டாள அரசன் தங்களை எட்டு வருடகாலம் ஆண்டான் என்றும், அது காரணமாக அந்தணர்கள் தீயில் குளித்தார்கள் என்றும், கடைசியில் அந்த அரசனும் தீயில் குளித்து இறந்தான் என்றும் கேள்விப்பட்டார்.
அந்தணர் காதிக்குத் தலை சுழன்றது. தாம் கனவில் கண்டது எப்படி நனவாக இருக்கும் என்று திகைத்தார்.
ஆகவே இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று மீண்டும் கடும் தவம் செய்ய ஆரம்பித்தார்.
அவர் தவத்தை மெச்சி ஒரு நாள் பகவான் விஷ்ணு அவர் முன் தோன்றினார்.
''என்ன, மாயையைப் பார்க்க வேண்டும் என்றாயே, பார்த்தாயா? நீ எது உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அது வெறும் பிரமைதான். உலகில் நாம் பார்க்கும் எல்லாக் காட்சிகளும் நம் சித்தத்தின் கற்பனைதான். ஜகத் என்னும் இந்தச் சிருஷ்டி உன் சித்தத்தின் கற்பனையிலிருந்து உண்டானதுதான். நீ பார்த்ததெல்லாம் பிரமைதான். ஆகவே, இதுதான் மாயை என்று தெரிந்துகொள்'' என்றார்.