சத்திய யுகத்தின் இறுதிப் பாகத்தில் கங்கை நதியிலிருந்து நான்கு மைல் தெற்கே சத்திய விரதம் என்ற ஒரு கிராமம் இருந்தது.
அதில் பிருஹத்தபா என்று அழைக்கப்பட்ட ஒரு பெரிய தவசி இருந்தார்.
மாலை வேளையில் பகவானுடைய கல்யாண குணங்களை ஹரி கதைகளாகச் சொல்வது அவர் வழக்கம்.
அதேக் கிராமத்தில் புண்ணியதாமா என்ற ஒர் அந்தணர் இருந்தார்.
பிருஹத்தபா எப்பொழுது கதை சொல்லப்போகிறார் என்று காத்திருந்து, இவர் கதை கேட்கப் போய்விடுவார். ஒரு நாள் கூட விடாமல் நூறு வருடக்காலம் தொடர்ந்து இவர் அந்த ஹரி கதைகளைக் கேட்டார்.
கங்கைக் கரைக்கு நான்கு மைல் தூரத்திலேயே வசித்தும், இவர் ஒரு நாள் கூட, கங்கையில் ஸ்நானம் செய்ததில்லை. கதை கேட்பது, தம்மைத் தேடி வரும் அதிதிகளை உபசரிப்பது இவை இரண்டும்தான் இவருடைய வேலை.
ஒரு நாள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக வெகு தொலைவிலிருந்து வந்த இரண்டு யாத்திரிகர்கள் இவர் வீட்டில் தங்கினார்கள்.
இவர் அவர்களை உபசரித்து அன்னம் போட்டார். இவருடைய மனைவி அதிதிகளுக்கு விசிறி கொண்டு வீசினாள்.
அப்பொழுது அதிதிகள் புண்ணியதாமாவைப் பார்த்து, ''இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரம்?'' என்று கேட்டார்கள்.
''உண்மையில் அது எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியாது. நான் நூறு வருடங்களுக்கு மேலாக, இந்தக் கிராமத்தில் இருந்தும் ஒரு நாள் கூட கங்கையில் ஸ்நானம் செய்ததில்லை. ஆனால், அது நான்கு மைல் தொலைவில் இருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் அவர்கள், ``கங்கையில் ஸ்நானம் செய்யாத இவரைப் போன்ற பாவி வேறு யாரும் கிடையாது என்று தோன்றுகிறது! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு `கங்கா, கங்கா' என்று சொன்னால் கூட அவர்களுடைய பாவங்களெல்லாம் நசித்து விடுகின்றன என்று கூறுகி்றார்கள். இவர் என்னடா என்றால், இத்தனை அருகில் இருந்தும் கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்று சொல்லுகிறாரே! இவர் வீட்டில் நாம் அதிதிகளாகத் தங்கியதேப் பாவம்'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு உடனே எழுந்து அந்த வீட்டை விட்டு வெளியேச் சென்று, கங்கையை நோக்கி நடந்தார்கள். கங்கையில் ஸ்நானம் செய்யாத அந்தப் பாவியின் வீட்டில் தங்கின பாவத்தைக் கங்கையில் ஸ்நானம் பண்ணித்தான் போக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு கங்கையை நோக்கி நடந்தார்கள்.
ஆனால் கங்கையை அடைந்தபோது, கங்கையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. நதி வறண்டு கிடந்தது. கங்கைக் கரை வழியாகவே, கங்கை உற்பத்தியாகும் இடம் வரை நடந்து பார்த்தார்கள். எங்கும் தண்ணீர் தென்படவில்லை.
யாத்திரிகர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் காசிக்குத் திரும்பினார்கள். கங்கையை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள். ``அம்மா, கங்காதேவி! நாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று தோன்றுகிறது. அதுதான் நீ எங்களுக்குத் தென்படவில்லை. தயவுசெய்து எங்கள் தவறைப் பொறுத்தருள வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார்கள்.
அப்பொழுது கங்கை அவர்களுக்கு முன் தோன்றிச் சொன்னாள், ''நீங்கள் அந்த மகாபுண்ணியசாலி புண்ணியதாமாவை நிந்தித்து விட்டீர்கள். அந்தப் புனிதனின் பாதத் தூளி என்மீது படாதா? என்று நானேக் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு ஹரி கதை நடக்கிறதோ, அங்கு எல்லாத் தீர்த்தங்களும் இருக்கின்றன. கோடி பிரம்மஹத்தி தோஷத்திற்குக் கூடப் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் பகவானின் பக்தர்களின் நிந்தனைக்குப் பிராயச்சித்தமேக் கிடையாது. ஹரி கதை கேட்பதைப் போன்ற சிறந்த புண்ணியம் வேறு கிடையாது. ஆகவே, நீங்கள் அந்தப் புண்ணியதாமாவின் மன்னிப்பைக் கோருங்கள். அதுவரையில் நான் உங்கள் கண்ணுக்குத் தென்படமாட்டேன். இரண்டு யாத்திரிகர்களும் புண்ணியதாமாவிடம் சென்று அவர் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர் அவர்களை பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு வருஷகாலம் ஹரிகதை கேட்கப் பண்ணினார்.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து கங்கைக்குச் சென்று ஸ்நானம் செய்தார்கள்.