ஒரு சந்நியாசி கனவு ஒன்று கண்டார்.
அந்தக் கனவில் அவர் சொர்க்கத்திற்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய திருவிழா.
எங்கும் அலங்கார வளைவுகள், தோரணங்கள், வண்ண விளக்குகள், பாதைகள் மறையும் வண்ணம் மலர்கள், எல்லாக் கட்டிடங்களிலும் ஒளி வெள்ளம். எங்கு நோக்கினும் ஒரே கோலாகலம்!
அது என்ன திருவிழா? என்று அந்த சந்நியாசிக்குப் புரியவில்லை. எதிரே வந்து கொண்டிருந்த ஒருவரிடம், “இங்கு என்ன நடக்கிறது?" என்று அவர் விசாரித்தார்.
“உங்களுக்குத் தெரியாதா விஷயம்? இன்றைக்கு இறைவனுக்குப் பிறந்த நாள்... அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். அதற்காகப் பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்" என்று கூறினார் அந்த மனிதர்.
உடனே அந்த சந்நியாசி ஒரு மர நிழலில் ஒதுங்கி நின்றுகொண்டு ஊர்வலத்தைக் கவனித்தார்.
ஊர்வலம் அலை அலையாக வந்து கொண்டே இருந்தது. பல யானைகள், பல குதிரைகள், எங்கும் ஒரே மக்கள் வெள்ளம்.
முதலில் ஒரு குதிரை வந்தது. அதன் மீது ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் பலர் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
“குதிரையின் மேல் இருப்பவர் யார்? இவ்வளவு கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து வருகிறதே, அவர்கள் எல்லாம் யார்?" என்று கேட்டார் சந்நியாசி.
சந்நியாசியிடம் பதில் கூறிய அதே நபர் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி, “குதிரை மேல் அமர்ந்திருப்பவர் அந்த மதத்தின் தலைவர். அவர் பின்னால் வருபவர்கள் எல்லாம் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள்" என்றார்.
அடுத்து, ஒரு யானையின் மேல் மற்றொருவர் வந்து கொண்டிருந்தார். அவர் பின்னாலும் ஏகப்பட்டக் கூட்டம்.
“இவர் யார்?" என்று வினவினார் சந்நியாசி.
இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி, “இவர் அந்த மதத்தின் தலைவர். அவர் வழியைப் பின்பற்றுகிறவர்கள் அவருக்குப் பின்னால் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சந்நியாசிக்குப் பதில் கிடைத்தது.
இப்படி அலை அலையாக வந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு அளவே இல்லை.
அந்தப் பெரிய ஊர்வலத்தின் கடைசியில் முடி நரைத்த ஒரு வயதானவர் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார்.
ஆனால் அவருக்குப் பின்னால் யாருமே தென்படவில்லை.
அந்தக் கிழவர் ஊர்வலத்தைச் சேர்ந்தவரா, இல்லையா என்பது சந்நியாசிக்குத் தெரியவில்லை. “இவர் யார்...? இவர் மட்டும் ஏன் இப்படித் தனியாக வந்து கொண்டிருக்கிறார்?" என்று விசாரித்தார் அந்த சந்நியாசி.
“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்...? அவர்தான் கடவுள்... அவருக்குத்தான் இன்றைக்குப் பிறந்த நாள். முன்னால் செல்லும் ஊர்வலம் முழுவதும் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள்தாம்" என்று பதில் சொன்னார் அந்த நபர்.
அதைக் கேட்ட சந்நியாசி திடுக்கிட்டார்.
இதுவரை கனவு கண்டு கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். விழிப்பு வந்த பிறகு அவரும் யோசிக்க ஆரம்பித்தார்.
உண்மைதான்.
மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்தில் போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறி போய்க் கொண்டு இருக்கிறார்களோ?
கடவுளைப் பின்பற்றுவதாக நினைக்கிறார்கள் மக்கள். ஆனால் கடவுளை நேசிக்க யாருமே இல்லை.
இன்னும் யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால்... ‘உண்மைக்குப் பின்னால்தான் நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறினாலும், அந்த உண்மை அநாதையாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. இப்படி ஆகி விட்டதே இந்த உலகம்...’ என்று நினைத்து அந்த சந்நியாசி தியானத்தில் மூழ்கினார்.