ஓர் அரசன் ஓவியப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான்.
தன்னை யார் திறம்பட வரைகிறார்களோ, அவர்களுக்கு ஏராளமான பரிசுகள் தருவதாகப் பறைசாற்றினான். பல சிறந்த ஓவியர்கள் அரசனை அணுகினார்கள்.
அரசனுக்கு ஒரு குறை உண்டு, ஒரு கண் மட்டும்தான் தெரியும்.
பல சிறந்த ஓவியர்கள் அரசனை ஓவியமாகத் தீட்டினார்கள். அதில் மூன்று ஓவியங்கள் பரிசீலிக்கப்பட்டன.
முதல் ஓவியம் உள்ளது உள்ளபடியே ஒற்றைக் கண்ணுடன் நேர்த்தியாகத் தீட்டப்பட்டிருந்தது.
இரண்டாவது ஓவியம் மிக அழகாகவும், இரண்டு கண்களும் இருப்பது போன்று வரையப்பட்டிருந்தது.
முதல் ஓவியத்தைப் பார்த்த அரசன் தன் குறையை நினைத்து வருத்தமுற்றான். பரிசு கொடுப்பதற்குப் பதிலாக, எல்லோரும் ஓவியனைத் திட்டித் தீர்த்தார்கள்.
இரண்டாவது ஓவியத்தை அரசன் உட்பட எல்லோரும் ரசித்தார்கள். ஆனால், படத்தில் அரசனுக்கு இரண்டு கண்களும் வரையப்பட்டிருந்தன. உண்மை அல்லாததை வரைந்ததால், யாரும் அந்த ஓவியனைப் பாராட்டவில்லை.
மூன்றாவது ஓவியத்தில் அரசன் முகத்தை வலது பக்கம் திரும்பி வில் பிடித்து, குறி பார்த்து அம்பு செலுத்தும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தில் அரசனின் குறை காட்டப்படவில்லை. அதே சமயம், உண்மையும் மறைக்கப்படாமல் சாமர்த்தியமாக வரையப்பட்டிருந்தது.
அதைக் கண்ட மக்கள் அந்த ஓவியனே தங்களது அரசனைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டினார் என்று மகிழ்ந்தார்கள்.
அரசனும் ஏராளமான பரிசுப் பொருள்களைத் தந்து அந்த ஓவியனை வாழ்த்தினார்.
உண்மையேயானாலும் குறையை மற்றவர் மனம் புண்படும்படித் தெரிவிக்கலாகாது என்பதை இக்கதையின் வழியாக, நாம் அறிந்து கொள்ளலாம்.