ஒருவனுக்குச் சேவலைக் கண்டாலேப் பயம். ஏனென்றால், அவனுக்குத் தன் மனதிலே தான் ஒரு புழு என்று நினைப்பு! புழுவைக் கண்டால் சேவல் கொத்திவிடுமல்லவா?
அதனால் சேவல் எதிரில் வந்தாலே அவன் நடுங்குவான்.
ஒரு மனநோய் மருத்துவரிடம் அவன் சென்றான். தன் பிரச்னையை அவரிடம் கூறினான். அந்த மருத்துவர் அவனை ஒரு வாரம் தங்க வைத்துச் சிகிச்சை அளித்தார்.
பிறகு ஒரு நாள், “நீ முழுமையாகக் குணமடைந்து விட்டாய். இனி நீ வீட்டுக்குப் போகலாம். நன்றாக ஞாபகம் வைத்துக் கொள், இனி நீ புழு இல்லை, மனிதன்! தைரியமாகப் புறப்படு" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.
அவன் புறப்பட்டான். பாதி தூரம் போனதும் எதிரில் ஒரு சேவல் வந்து கொண்டிருந்தது. அவ்வளவுதான், அவன் நடுங்கியபடியே திரும்பி மருத்துவரிடம் ஓடி வந்துவிட்டான்.
அதனைக் கண்ட மருத்துவர், “ஏன் திரும்பிவிட்டாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த நோயாளி, “எதிரில் ஒரு சேவல் வந்தது” என்றான்.
மருத்துவர், “நான்தான் சொன்னேனே... நீ புழு இல்லை, மனிதன். நீ ஒரு புழு இல்லை என்பது உனக்கு இன்னுமா புரியவில்லை?” என்றார்.
நோயாளி, “நான் புழு இல்லை என்பது எனக்குத் தெரிந்துவிட்டது டாக்டர். ஆனால், அந்தச் சேவலுக்குத் தெரியுமா என்று தெரியவில்லையே!” என்றான்.