அந்தக் குடும்பத் தலைவர் மிகவும் கண்டிப்பானவர். வீட்டில், யார் குற்றம் புரிந்தாலும் ஒரு ரூபாய் அபராதமாக வீட்டு உண்டியலில் போட்டு விட வேண்டும். அது அவரது சட்டம்.
அந்த உண்டியலுக்குச் சத்திய உண்டியல் என்று பெயர்.
அம்மா, மனைவி, தங்கை, மகள், மகன் என்று அனைவரும் அந்தச் சட்டத்தைப் பல ஆண்டுகள் கவனமாகக் கடைப்பிடித்து வந்தனர்.
உண்டியலில் ‘சத்தியமேவ ஜெயதே’ என்று எழுதியிருப்பதைத் தினமும் தொட்டு வணங்கி வந்தது, அந்தக் குடும்பம்.
ஒருமுறை, பல மாதங்கள் வெளியூர் சென்று வந்த தந்தை, உண்டியலை எடுத்து குலுக்கிப் பார்த்தார்.
ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே அதில் ஒலித்தது.
தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி!
இத்தனை நாட்களுள் என் வீட்டில் ஒரு குற்றம்தான் நடந்துள்ளதா? என் வீடு திருந்தியது என்று ஆனந்தப்பட்டார்.
அப்போது அவரது மகன் நெளிந்தபடி அவர் முன் வந்து நின்றான்.
“அப்பா, நானூறு ரூபாய் வரை உண்டியலில் சேர்ந்தது. அத்தனையும் என் செலவுக்காகத் தேவைப்பட்டது. அதனால் உண்டியலைத் தலைகீழாகக் குலுக்கி எடுத்துக் கொண்டேன். எடுத்துக் கொண்ட ஒரு குற்றத்துக்கு மட்டும் ஒரு ரூபாய் போட்டேன். இது தவறா அப்பா?" என்று கேட்டான்.
உடனே தந்தை, “மகனே, இனி இது சத்யமேவ ஜெயதே உண்டியல் அல்ல; சாமர்த்தியமேவ ஜெயதே உண்டியல் என்றுதான் இருக்க வேண்டும்" என்றார்.