துரோணர் சிறுவயதில் ஓர் ஆசிரியரிடம் குருகுல வாசம் செய்து வித்தைகளைக் கற்றார். அப்போது அவரோடு துருபதன் என்ற அரசகுமாரனும் அதே ஆசிரியரிடம் சீடனாக இருந்தான்.
துரோணரும் துருபதனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் ஒரு கணங் கூடப் பிரிந்து இருக்க மாட்டார்கள். இறுதியில், அவர்களுடைய குருகுலவாசம் முடிந்தது. இருவரும் பிரிய வேண்டிய தருணம் வந்தது.
"நீயோஅரசகுமாரன். நான் ஏழைப் பிராம்மணன். என்னை இனி நீ மறந்து விடுவாய் அல்லவா, துருபதா?"
''என்ன துரோணா அப்படிக் கேட்டுவிட்டாய்? நான் அரசனானால், அப்போது நீ வா. தெரிந்து கொள்வாய். என் நாட்டில் பாதியை உனக்குத் தந்துவிடுவேன்" என்று கூறினான் துருபதன்.
அவனுடைய அன்பைப் பாராட்டியபடி துரோணர் தம் வீட்டிற்குச் சென்று விட்டார்.
ஆண்டுகள் பல கழிந்தன.
துரோணருக்குத் திருமணம் நடந்து அவருக்கு மகனும் பிறந்துவிட்டான். அசுவத்தாமன்என்று அவனுக்குப் பெயர் வைத்தார் துரோணர்.
சிறுவன் வளர வளர அவனுக்குப் பால் வாங்கக்கூடத் துரோணரிடம் பணம் இல்லை. அந்த ஏழைமை நிலையை மாற்ற அவர் துருபதனைச் சென்று பார்த்து வரத் தீர்மானித்தார். துருபதன் அப்போது அரசனாகி விட்டிருந்தான். அவனைப் பார்த்து இரண்டொரு பசுமாடுகள் வாங்கி வர வேண்டும் என்று துரோணர் எண்ணினார்.
துரோணர் அரசவையை அடைந்த போது துருபதன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். துரோணரைஅவன் அடையாளம் கண்டுகொண்டான். ஆனால், கந்தையுடை உடுத்திய ஒருவனைத் தன் நண்பன் என்று சபைநடுவே ஒப்புக்கொள்ள அவன் வெட்கினான். ஆகவே அவன் அவரைப் பார்த்ததாகவேக் காட்டிக் கொள்ளவில்லை!
"துருபதா!" அழைத்தவர் துரோணர்.
“யார் நீ? என் பெயரைச் சொல்லி அழைக்க உனக்கு என்ன ஆணவம்!''
துரோணர் திடுக்கிட்டார்: 'துருபதனாஇப்படிப் பேசுவது!' இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.
"மன்னியுங்கள், அரசே! குருகுலவாசத்துப் பழக்கம், தவறி வந்துவிட்டது. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இளவயதில் நாம் நண்பர்களாக இருந்த போது பாதி நாட்டையேத் தருகிறேன் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், எனக்கு வேண்டியவை இரண்டு பசுமாடுகள் மட்டுமே. தருவீர்களா?"
“அடசீ! இந்த ஏழைப் பிச்சைக்காரனை யார் உள்ளே விட்டது? இவனை வெளியேத் தள்ளுங்கள். குருகுலவாசமாம், நான் சொன்னேனாம்!" என்று கத்தினான் துருபதன்.
அவமானத்தால் வெட்கிப்போய், துரோணர்வெளியே வந்தார்.
கால் போன போக்கில் அவர் நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான் பாண்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசிரியரானது.
தம் கதையைக் கூறிய அவர், கண்களில் துளித்த நீரைத் துடைத்துக் கொண்டார்.
''அந்தத் துருபதனை வென்று அவனை இழுத்து வர வேண்டும். அதுதான் நான் கேட்கும் குருதட்சிணை.''
அர்ச்சுனன் ஆசிரியரின் கண்ணீரைக் கண்டதும் துடித்துப் போனான். தான் தனியே சென்று துருபதனைக் கொண்டு வருவதாகச் சூளுரைத்தான். தன் குதிரையில் தாவி ஏறிக்கொண்டு சிட்டாகப் பறந்தான் அர்ச்சுனன்.