தேவலோகத்தில் தேவேந்திரன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
துர்வாச முனிவரின் வரத்தின்படி குந்திதேவிக்கு அர்ச்சுனனைக் குழந்தையாகக் கொடுத்தவன் அவனேயன்றோ! அதனால், தன் மகனுக்குக் கர்ணனால் எந்த விதத்திலும் கெடுதல் வந்துவிடக்கூடாதே என்று அவன் சிந்தித்தான்.
அவனுக்கு ஒரு வழி தோன்றியது.
கர்ணன் என்றுமே இரக்கம் மிகுந்தவன். துரியோதனன் அவனை அங்க தேசத்திற்கு அரசனாக்கிய பிறகு, கொடுப்பதற்கு அவனிடம் பொருளும் இருந்தது.
கேட்பவருக்குக் கேட்டதையெல்லாம் கொடுத்துப் பெரும் புகழை அடைந்திருந்தான் கர்ணன். 'இல்லை' என்ற சொல் கர்ணனின் வாயிலிருந்து வந்ததேயில்லை.
'அப்படிப்பட்ட வள்ளலான கர்ணனிடம் சென்று, அவனுடைய கவசக் குண்டலங்களைத் தானமாகப் பெற்று வந்துவிட்டால், மரணமில்லாத நிலையை இழந்து கர்ணன் சாதாரண மனிதனாகிவிடுவான்' என்று இந்திரன் முடிவெடுத்தான்.
கர்ணனைப் படைத்த சூரிய பகவான் இதை அறிந்து கொண்டார்.
அவர் கர்ணனின் கனவில் தோன்றினார். ''கர்ணா! உன்னை ஏமாற்றி உன் கவச குண்டலங்களைப் பெற இந்திரன் திட்டமிடுகிறான். நாளைக்கு ஓர் அந்தணன் போல அவன் வருவான். அவனிடம் நீ ஏமாந்துவிடாதே'' என்று அவர் எச்சரித்தார்.
மறுநாள் சூரிய பகவான் கூறியது போலவே அந்தணன் வடிவில் இந்திரன் கர்ணனின் சபைக்கு வந்து கவச குண்டலங்களைத் தானமாகக் கொடுக்குமாறு வேண்டினான்.
கர்ணன் விழுந்து வணங்கினான். ''சுவாமி! தாங்கள் இந்திரன் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் இங்கு வந்ததன் காரணத்தையும் நான் ஏற்கனவே அறிவேன். கேட்பதைக் கொடுப்பவன் கர்ணன்; நீங்கள் கேட்டதையும் கொடுப்பேன்'' என்று கூறினான்.
பிறகு, தன்னோடு பிறந்த குண்டலங்களையும் கவசத்தையும் தன் உடலி லிருந்து பிய்த்தெடுத்து இந்திரனிடம் கொடுத்தான்.
இந்திரன் மனம் இளகியது.
''கர்ணா! உன் உயிர்ப்பலத்தையே எனக்குப் பிச்சையாகக் கொடுத்து விட்ட உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! இந்தா, இந்தச் சக்தி ஆயுதத்தை வைத்துக்கொள். இதை நீ ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம். அதன் பிறகு இது என்னிடம் வந்துவிடும்'' என்று கூறிவிட்டு அவன் இந்திர லோகத்தை அடைந்தான்.
இந்திரனுக்கே பிச்சையிட்ட கர்ணனின் கொடைத்தன்மையைக் கண்டு உலகமே வியந்தது.