முன்னொரு சமயம் ஓர் ஊருக்கு வெளியே ஒரு ஞானி வசித்து வந்தார். அவரை ஒரு பக்தர் தினந்தோறும் போய்ச் சந்தித்து, அவர் காலில் விழுந்து வணங்கி அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார். பிறகு வீடு திரும்புவார். சில மாதங்கள் இப்படித் தொடர்ந்து நடந்தது.
அதனால் ஞானிக்குப் பக்தர் மீது தயை பிறந்தது. ஒரு நாள் அவர் பக்தரைத் தம் பக்கத்தில் அழைத்து, ''உன் குருபக்தியையும் தெய்வ பக்தியையும் பெரிதும் மெச்சுகிறேன். அதற்காக நான் உனக்கு விலைமதிக்க முடியாத வெகு ரகசியமான பொருளைக் கொடுக்கப் போகிறேன். அதை நீ யாருக்கும் கொடுக்கக் கூடாது. இந்த விலையுயர்ந்த பொருள் உன்னிடம் இருப்பதாகவே யாருக்கும் தெரியக்கூடாது'' என்று சொல்லி அவன் காதில் 'ராம' என்ற மந்திரத்தை ஓதினார்.
``இதை நீ எந்தக் காலத்திலும் ஜபித்துக் கொண்டிரு. உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்'' என்று சொன்னார். பக்தரும் அன்றையிலிருந்து விடாமல் ராமநாமத்தை ஜபிக்கத் தொடங்கினார்.
ஒரு நாள் அந்தப் பக்தர் ஸ்நானம் செய்வதற்காகக் கங்கைக்குச் சென்றார். ஸ்நானம் செய்துவிட்டித் திரும்பியபொழுது, பலர் ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே வீடு திரும்புவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
''நம் குரு, 'இதை யாருக்கும் சொல்லாதே. இது மிகவும் ரகசியமானது' என்று சொன்னாரே! இது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே. அப்படியிருக்க அதை மிக விலையுயர்ந்த பொருள் என்று எப்படி நினைப்பது?'' இப்படிப் பல சந்தேகங்கள் அவரை வாட்டத் தொடங்கின.
அடுத்த நாள் காலை, பொழுது விடிந்ததும் விடியாததுமாக அவர் அந்த ஞானியைப் பார்த்துத் தம் சந்தேகத்தைத் தெரிவித்தார்.
ஞானி அவரைப் பார்த்து, ``நான் உன் சந்தேகத்தைத் தெளிய வைக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கு ஒரு காரியம் செய்'' என்று சொல்லி, தம் பையிலிருந்து பளபளவென்று மின்னியதும், கண்ணாடித் துண்டைப் போன்று தோற்றமளித்ததுமான ஒரு பொருளை எடுத்தார். அதைப் பக்தரிடம் கொடுத்து, ``இதைக் கடைவீதிக்கு எடுத்துக் கொண்டு செல். எல்லோரையும் இதன் விலை என்ன என்று விசாரி. ஆனால் யாரிடமும் விற்றுவிடாதே!'' என்று சொன்னார்.
பக்தர் அந்தக் கண்ணாடித் துண்டைக் கடைவீதிக்கு எடுத்துச் சென்றார். எதிரே கறிகாய்க்காரனைப் பார்த்து, ``இதற்கு என்ன விலை கொடுப்பாய்?'' என்று கேட்டார்;
கறிகாய் வியாபாரி அதை வாங்கிப் பார்த்தான். 'இது பளபளவென்று மின்னுகிறது. இதை நம் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்!' என்று நினைத்தான். ஆகவே பக்தரைப் பார்த்து, '`இதற்குப் பதில் இரண்டு சேர் உருளைக்கிழங்கு தருகிறேன்'' என்றான்.
``இல்லை, இதை விற்பதற்கில்லை'' என்று சொல்லிவிட்டு, பக்தர் மேலே சென்றார். ஒரு பொற்கொல்லரின் கடை தென்பட்டது. பொற்கொல்லரிடம், ``இதற்கு என்ன விலை கொடுப்பீர்கள்?'' என்று பக்தர் கேட்டார். பொற்கொல்லர் அதை வாங்கிப் பார்த்தார். `பார்த்தால் போலி வைரம் போலத் தோன்றுகிறது. நூறு ரூபாய் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்' என்று தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டார். பக்தரைப் பார்த்து, ``இதற்கு நூறு ரூபாய் தர முடியும். கொடுக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
``இல்லை, இதை விற்பதற்கில்லை'' என்று சொல்லிவிட்டு, பக்தர் மேலே சென்றார். வழியில் ஒரு லேவாதேவிக்காரர் தென்பட்டார். அவரிடம் பக்தர், ``இதற்கு என்ன விலை கொடுப்பீர்கள்?'' என்று கேட்டார்.
`பார்த்தால் அசல் வைரம் அல்ல என்று தோன்றுகிறது. ஆனால் இத்தனை பெரியதாக இருப்பதால் இதையாரும் போலி என்று நினைக்கமாட்டார்கள். ஆகவே இதற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம்' என்று நினைத்தார். ஆகவே பக்தரைப் பார்த்து, ``நான் ஆயிரம் ரூபாய் கொடுக்கக் தயாராக இருக்கிறேன். கொடுப்பீர்களா?'' என்று கேட்டார். ``இல்லை, இதைக் கொடுப்பதற்கில்லை'' என்று சொல்லிவிட்டு, பக்தர் மேலே சென்றார்.
வழியில் ஒரு நகைக் கடை தென்பட்டது. அதற்குள் நுழைந்தார். நகை வியாபாரியைப் பார்த்து, ``இதற்கு என்ன கொடுப்பீர்கள்?'' என்று கேட்டார். நகை வியாபாரி அதை வாங்கிப் பார்த்தார். `பார்த்தால் அசல் வைரம் போல் தோன்றுகிறது. இந்த நல்ல வைரம் இந்த ஆளுக்கு எப்படி கிடைத்தது?' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே, பக்தரைப் பார்த்து, ``இதற்கு லட்சம் ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். கொடுக்க முடியுமா?'' என்று கேட்டார். ``இல்லை, கொடுப்பதற்கில்லை'' என்று சொல்லிவிட்டு, பக்தர் மேலே சென்றார்.
சிறிது தூரம் சென்றதும், அந்த ஊரிலேயே மிகப் பெரிய நகை வியாபாரி என்று கருதப்பட்ட ஒரு வியாபாரியின் கடை வந்தது. நகை வியாபரியைப் பார்த்து, பக்தர், ``இதற்கு என்ன கொடுப்பீர்கள்?'' என்று கேட்டார். நகை வியாபாரி அதை ஆச்சரியத்தோடு பார்த்தார். அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். கடைசியில் பக்தரைப் பார்த்து, ``இது மிகவும் விலையுயர்ந்த வைரம். இத்தனை பெரிய வைரத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இதன் உண்மை விலையை யாராலும் கொடுக்க முடியாது. அத்தனை பொருள் நம்நாட்டு அரசரிடம்கூட இல்லை. ஆகவே இத்தனை பெரிய வைரத்தை என்னால் வாங்கிக் கொள்ள இயலாது'' என்று கூறி, அதைப் பக்தரிடம் திருப்பிக் கொடுத்தார்.
பக்தர் ஞானியிடம் திரும்பி வந்து நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னார்.
``ஒரு பொருளின் மதிப்பு அதைப் பொறுத்தது அல்ல; அதை மதிப்பிடுகிறவர்களைப் பொறுத்தது. ஆகவே அந்தப் பெரிய நகை வியாபாரி எப்படி இதை விலை மதிக்க முடியாது என்று சொன்னாரோ அப்படியேதான் எனக்கும் ராமநாமம் விலை மதிக்க முடியாதது. அதைப் போலவே உனக்கும் ராம நாமம் விலை மதிக்க முடியாததாக இருக்கட்டும்'' என்று சொன்னார் ஞானி.