ஒரு நாள் ஏழு தீவுகளைச் சேர்ந்த ஏழு ரிஷிகளும் விசாலமானதோர் ஆலமரத்தின் அடியில் சந்தித்தனர். பிரார்த்தனை நேரம் நெருங்கவே, `இறைவனிடம் என்ன வேண்டலாம்?' என்று யோசித்தனர்.
``உணவு கேட்கலாம். உணவின்றி வாழ்க்கை இல்லை'' என்றார் ஒருவர்.
``ஊஹூம், பலம் கேட்கலாம். உடல் வலுவின்றி உணவு உண்டாகாது!'' என்றார் இரண்டாமவர்.
''வலிமையைக்காட்டிலும் அறிவை வேண்டுவதே நல்லது. அறிவினாலே எந்தச் செயலையும் சாதித்து விடலாம்'' என்றார் மூன்றாமவர்.
``அறிவைக் காட்டிலும் அமைதியை வேண்டுவதே நலன் பயக்க வல்லது. அமைதியின்றித் தவிக்க நேர்ந்தால், எந்தச் செயலைத்தான் உருப்படியாகச் செய்ய முடியும்?'' என்று கேட்டார் நான்காமவர்.
``அமைதியைக் காட்டிலும் அன்பை வேண்டுவது மேல். அன்பு இன்றி அமைதி கிட்டாது'' என்று மறுத்தார் ஜந்தாமவர்.
``என்னைக் கேட்டால் அன்பைக் காட்டிலும் தியாகத்தை வேண்டுவதே நல்லது. தியாக உணர்வு இன்றி அன்பு உறுதிப்படாது!'' என்றார் ஆறாமவர்.
``சிரத்தையை வேண்டுவதுதான் சாலச் சிறந்தது. சிரத்தை இன்றித் தியாக உணர்வு எப்படி ஏற்படும்?'' என்று கேட்டார் ஏழாமவர்.
பிரார்த்தனைக்கு நேரமாவதைக் கண்ட ஆலமரம் கனிவோடு கூறியது:-
``வீண்பேச்சில் எதற்காக நேரத்தைச் செலவிடுகிறீர்கள்? முதலில் பிரார்த்தனை செய்யுங்கள். எது வேண்டுமானாலும் கேளுங்கள். கேட்பதைக் காட்டிலும் வேண்டியதைக் கொடுக்க அவன் இருக்கிறான்”