ஒரு முறை வால்மீகி முனிவர் நாரத மகரிஷியிடம், ''தற்காலத்தில் மனிதர்களிடம் அரிதாகக் காணப்படும் நற்குணம், ஆற்றல், அறங்கள் பற்றிய தெள்ளறிவு, நன்றி மறவாமை, வாய்மை, கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உறுதி, நல்லொழுக்கம், பிராணிகளின் நலனில் அக்கறை, பேரறிவு, செயல் திறன், கண்டவுடன் பிரியம் ஏற்படும் பேரழகு, மனதை வசப்படுத்திய தன்மை, கோபத்தை வென்ற குணம், ஒளி பொருந்திய தோற்றம், எவரிடத்திலும் வெறுப்பில்லாத குணம், போர்க்களத்தில் கோபம் ஏற்பட்டால் அதைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்கும் பராக்கிரமம் ஆகிய 16 சிறப்புத் தகுதிகளும் கொண்டு வாழ்கின்ற ஆத்மவான் யாராவது இருக்கிறாரா? இருப்பின் அவரைப் பற்றிக் கூறுங்கள்'' என்று கேட்டார்.
ஆத்மவான் என்றால் ஆத்மாவில் நிலைபெற்றவன் அல்லது ஆத்ம சொரூபமாக விளங்குபவன் என்பது பொருள். பூமியிலுள்ள எல்லா உயிர்களிலும் ஆத்மா உள்ளது. அவ்வகையில் அனைத்தும் ஆத்மாவே. ஆனால் ஆத்மவான் என்பவன் தன்னுள் உறையும் ஆத்மாவே, தான் என்பதை உணர்ந்து, அந்த ஆத்மாவிலேயே எப்போதும் நிலைத்து, தெய்விக ஆற்றலைத் தன்னுடைய வாழ்வில் வெளிப்படுத்துபவன். அத்தகைய மனிதனாக, ஸ்ரீராமனாக இறைவன் அவதரித்தான்.
நாரத மகரிஷி, 'மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமரே நீங்கள் கேட்கும் அனைத்து நற்குணங்களுடன் வாழ்பவர்' என்று பதிலளித்து, அவரது வாழ்க்கைச் சுருக்கத்தையும் முனிவருக்கு எடுத்துரைத்தார்.
வால்மீகி முனிவருக்கு இந்த உரையாடல்தான் ராமகாவியத்தை எழுத ஒரு முக்கிய தூண்டுதலாக அமைந்தது.