ஒரு சிறுவன் கடவுளைக் காண விரும்பினான். கடவுள் வசிக்கும் இடம் மிகவும் தூரத்தில் இருக்கிறது என நம்பினான். நாலைந்து சாக்லேட்டுகள், குளிர்பானங்களுடன் தன் நீண்ட யாத்திரையைத் தொடங்கினான்.
நீண்ட தூரம் சென்ற பின் அங்கொரு மூதாட்டியைப் பார்த்தான்.
அந்தப் பாட்டி ஒரு பார்க்கில் உட்கார்ந்தபடி புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறுவன் அந்தப் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்து தன் பையிலிருந்த குளிர்பானத்தைக் குடிக்க ஆயத்தமானான்.
அந்தப் பாட்டியைப் பார்த்ததும் அவர் பசியோடிருப்பதாகத் தெரிந்தது.
அதனால் ஒரு சாக்லேட்டை அவருக்குக் கொடுத்தான்.
அவர் அதை நன்றியுடன் வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தார்.
அந்தச் சிரிப்பு மிகவும் அழகாக இருந்ததால் மீண்டும் அந்தச் சிரிப்பைப் பார்க்க அந்தச் சிறுவன் பாட்டிக்குக் குளிர்பானத்தைக் கொடுத்தான்.
மீண்டும் அதைப் பெற்றுக் கொண்டு அந்தப் பாட்டி சிரித்தார்.
அந்தச் சிறுவனுக்கு மிகவும் சந்தோஷம்.
நாள் முழுவதும் அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அங்கேயே இருந்தார்கள்.
ஒருவருக்கொருவர் பேசக்கூட இல்லை.
இருட்ட ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் எழுந்து சிறிது தூரம்தான் போயிருப்பான், திரும்பி ஓடி வந்து அந்தப் பாட்டியை அணைத்துக் கொண்டான்.
அந்தப் பாட்டியின் முகமும் சிரிப்பில் மலர்ந்தது.
சிறுவன் தன் வீட்டை அடைந்தான். கதவைத் திறந்த அவனுடைய தாய் அவனது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.
''இவ்வளவு சந்தோஷப்படும்படி இன்று நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டாள்.
''அம்மா இன்று கடவுளுடன் உணவு சாப்பிட்டேன்'' என்று கூறி, ''உனக்குத் தெரியுமா? உலகத்திலேயே ரொம்ப அழகான சிரிப்பு அவருக்கு இருந்தது'' என்றான்.
அதேச் சமயத்தில் அந்தப் பாட்டியும் மிகுந்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்.
அந்தப் பாட்டியின் மகன் அவளிடம் கேட்டான்.
"அம்மா, நீ இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாயே? என்ன ஆயிற்று?”
"நான் இன்று பூங்காவில் கடவுளுடன் சாக்லேட் சாப்பிட்டேன். உனக்குத் தெரியுமா? கடவுள் நான் நினைத்ததை விட மிகவும் சிறியவராக இருக்கிறார்!” என்றாள் பாட்டி.