சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு அன்றொரு பொன்னாள்.
ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீபலராமனும் தங்களை மாணவர்களாக ஏற்றுக்கொள்ளும்படி சாந்தீபனி முனிவரிடம் வேண்டிய நன்னாள்.
முனிவருக்கோ சொல்லொண்ணா ஆச்சரியம். 'உலகத்திற்கே குருவான இறைவன் என்னைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளானே' என்று தன் பாக்கியத்தை மனதில் வியந்து அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார்.
வேதங்களையும், வாழ்க்கைக் கல்வியையும், அரசகுமாரர்களுக்குச் சொல்லித் தர வேண்டிய போர்க் கலைகளையும் அவர்களுக்குப் போதித்தார்.
ஒருமுறை கேட்ட மாத்திரத்திலேயேப் புரிந்து கொண்டு அந்தக் கலையில் தேர்ச்சி பெற்று விடுவான் ஸ்ரீகிருஷ்ணன். 64 நாட்களில் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்று குருவின் அன்புக்குரிய சீடனானான்.
அவர்களது குருகுலவாசம் முடியும் தருணம் வந்தது.
சாந்தீபனி முனிவர் மாணவர்களிடம், ''ஒரு மனிதனின் உயர்வு அவனது பண்பை வைத்தே அமையும். பண்பில்லாதவன் உயர்ந்தவன் ஆகான். குலம், பட்டம், செல்வம், புறத்தோற்றம் போன்றவற்றை வைத்து மதிப்பிடாமல் ஒருவனது பண்பை வைத்து மதிப்பளித்து எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும். இங்கு நீங்கள் கற்ற கல்வி, வாழ்க்கையில் உபயோகப்பட்டு முழுமையடைந்தவர்களாக விளங்க எனது உளமார்ந்த ஆசிகள்'' என்றார்.
காலம் கடந்தது.
ஸ்ரீகிருஷ்ணர் துவாரகாவின் அரசனாக வீற்றிருக்கிறார்.
அரண்மனைக் காவலன் வந்து, ''அரசேத் தங்களைக் காண சுதாமா என்ற ஒருவர் வந்திருக்கிறார். அவர் தங்கள் குருகுலத் தோழனாம். ஆனால் அவர் உடையையும் தோற்றத்தையும் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. உள்ளே அனுமதிக்கலாமா?'' என்று பணிவோடு வேண்டினான்.
சுதாமா என்ற பெயரைக் கேட்டதுமே ஸ்ரீகிருஷ்ணர் தன் அரியணையிலிருந்து துள்ளிக் குதித்து வாசலுக்கு ஓடி வந்து, ஏழை சுதாமாவைக் கட்டி அணைத்து, வரவேற்று, அரியணையில் அமர்த்தி ஆனந்தக் கண்ணீரால் அவரது பாதங்களை அபிஷேகம் செய்து உபசாரம் செய்தார்.
நண்பர்கள் இருவரும் தங்கள் குருகுலக்காலத்தை நினைவு கூர்ந்தனர்.
''குருவின் அருளாசியால் நான் இப்பொழுது அஷ்டலட்சுமியுடன் எல்லா வளங்களும் பெற்று வாழ்க்கையில் முழுமையடைந்துள்ளேன். நீ எப்படி இருக்கிறாய் சுதாமா?'' என்று கேட்டார் ஸ்ரீகிருஷ்ணர்.
''உன் போன்ற நண்பனையும் நம் குருநாதரைப் போன்ற குருவையும் அடைந்த எனக்கு என்ன குறை? நானும் நிறைவுடன் ஆனந்தமாக உள்ளேன்'' என்றார் சுதாமா.
வறுமையில் வாடினும், பண்பினால் முழுமையடைந்த சுதாமாவைக் கண்டு வியந்த ஸ்ரீகிருஷ்ணர் அன்போடு அவர் தந்த அவலை உண்டு, அவருக்குத் தெரியாமலேயே அவரது வறுமையை அழித்தார்.
குருகுலத்தில் தான் கற்றதை வாழ்வில் கடைப்பிடித்து, குணமென்னும் குன்றேறி நின்ற ஸ்ரீகிருஷ்ணர் உலகிற்கே குருவாக இருந்தாலும், குருகுலவாசம் செய்து, 'குருவின் மூலமாகக் கற்ற கல்வியே வாழ்வினை வளம் பெறச் செய்யும்' என்ற உண்மையை உலகிற்குக் காட்டினார்.