அவள் மிகவும் ஏழை. குடும்பமோ சிறியது. வானொலி நிலையத்துக்குப் போன் செய்து ''ஐயா, இந்த ஏழையின் குடும்பத்திற்கு கடவுளிடமிருந்து ஏதாவது பொருள் உதவி கிடைக்கும்படியான நிகழ்ச்சியை ஒலிபரப்புங்களேன்'' என்று கூறினாள்.
அவர்களும் ஒலிபரப்பினர்.
ஒரு நாத்திகரும் அந்த நிகழ்ச்சியைக் கேட்டார்.
கடவுள் பக்தியுள்ள அந்தப் பெண்மணியைக் கிண்டலடித்து ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார்.
அவர் அவளது முகவரியைப் பெற்று, தன் செயலாளரிடம் பெரிய அளவில் உணவுப் பண்டங்களை வாங்கிச் சென்று அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுக்கப் பணித்தார்.
'அந்தப் பெண்மணி யார் இந்த உணவை அனுப்பியது? என்று கேட்டால், அது பிசாசிடமிருந்து வந்துள்ளது' என்று கூறும்படி உத்தரவிட்டார்.
செயலாளர் அப்பெண்ணின் வீட்டை அடைந்தாள்.
அந்தப் பெண்மணி தான் பெற்ற உதவிக்கு மிகவும் மகிழ்ந்து நன்றி தெரிவிப்பதாகக் கூறி, வேறு எதுவும் பேசாமல் அந்த உணவுப் பண்டங்களை அவளது வீட்டிற்குள் எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
செயலாளர் அவளிடம், 'இந்த உணவுப் பொருட்களை யார் அனுப்பியது என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?' என்று கேட்டாள்.
அந்தப் பெண்மணி பதிலளித்தாள்:
'தேவையில்லை. கடவுள் ஆணையிட்டால் பிசாசுகூடக் கேட்டுத் தானே ஆக வேண்டும்?'