ஒரு சமயம் இமயமலைச் சாரலில் சத்யதபா என்ற முனிவர் தவம் செய்து வந்தார்.
ஒரு நாள் அவர் கோடாலியினால் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது கோடாலி அவரது இடக்கை கட்டைவிரலை வெட்டிவிட்டது. இடக்கை கட்டைவிரல் துண்டாகிக் கீழே விழுந்தது.
ஆச்சரியம் என்னவென்றால் வெட்டிய பாகத்திலிருந்து இரத்தம் வரவில்லை. அந்த விரலிலிருந்தும் இரத்தம் வரவில்லை.
முனிவரும் தமக்கு வலி எதுவும் ஏற்பட்டது போலவும் காட்டிக் கொள்ளவில்லை.
அவர் பேசாமல் கீழே கிடந்த விரலை எடுத்தார். அதை வெட்டுண்ட இடத்தில் வைத்தார். அது ஒட்டிக் கொண்டு விட்டது!
பிறகு அவர் விறகு வெட்டும் வேலையை முன்பு போலவே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்.
இந்த ஆச்சரியத்தை அந்தக் கிராமத்திற்கு வந்திருந்த தேவலோகத் தம்பதிகள் பார்த்தனர்.
அவர்கள் அடுத்த நாள் காலை இந்திர சபைக்குச் சென்றனர்.
அங்கு தேவர்களும், ரிஷிகளும் புடை சூழ இந்திரன் தன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான்.
அப்பொழுது இந்திரன் சபையோர்களைப் பார்த்து, "நீங்கள் யாராவது அதிசயமான காட்சி எதையாவது பார்த்திருந்தால் சொல்லுங்கள்'' என்றான்.
உடனே அந்த தேவலோகத் தம்பதிகள் எழுந்து, சத்யதபா என்னும் முனிவரின் கட்டைவிரல் அறுந்து விழுந்த விதத்தையும், அது பிறகு ஒட்டிக் கொண்டதையும் தெரிவித்தார்கள்.
உடனே இந்திரன் விஷ்ணுவைப் பார்த்து, "நாம் அந்த முனிவரைப் பார்த்துவிட்டு வர வேண்டும். அவருக்கு ஒரு பரீட்சையும் வைக்க வேண்டும்'' என்று சொன்னான்.
“சரி'' என்று விஷ்ணு ஒரு பன்றியைப் போல் வடிவம் கொண்டு அந்த முனிவரின் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஓட ஆரம்பித்தார்.
அப்பொழுது இந்திரன் ஒரு வேடனைப் போன்ற உருவத்தில், வில்லும் கையுமாக வரவே, அந்தப் பன்றி எங்கேயோ ஓடி மறைந்தது. அது எங்கே சென்றது என்பதை முனிவர் சத்யதபா கவனித்தார்.
அப்பொழுது இந்திரனாகிய அந்த வேடன் அவர் முன்னால் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பன்றி வந்ததே, அது எங்கு சென்றது சொல்ல முடியுமா? அதைக் கொன்றுதான் நான் இன்று என் மனைவி, குழந்தைகள் ஆகியோரின் பசியைப் போக்க வேண்டும்'' என்றான்.
அதைக் கேட்ட முனிவர், 'இப்போது ஒரு பெரிய தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டோமே!' என்று தவித்தார். 'பன்றி இருக்கும் இடத்தைச் சொன்னால், வேடன் பாவம் அந்தப் பன்றியைக் கொன்று விடுவான். சொல்லாவிட்டாலோ, வேடனும் அவன் மனைவியும், குழந்தைகளும் பட்டினியால் சாவார்கள், என்ன செய்யலாம்!' என்று யோசித்தார்.
திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது :
'நாம் பன்றியைப் பார்த்தது இந்தக் கண்களாலேதானேயன்றி, நாக்கினால் அல்ல! அப்படியிருக்க, கண் பார்த்த விஷயத்தை நாக்கு ஏன் சொல்ல வேண்டும்? நாக்கு ருசி பார்க்கும் விஷயத்தைக் கண் தெரிவிக்கிறதா? பார்த்தது நாக்கு அல்ல, ஆகவே எதற்காகப் பேச வேண்டும்? ஆதலால், இது விஷயமாக மௌனமாக இருப்பதுதான் சரி' என்று தீர்மானித்தார்.
எனவேப் பேசாமல் இருந்தார்.
இந்திரனும் விஷ்ணுவும், முனிவரின் மனதில் தோன்றிய எண்ணங்களைப் புரிந்து கொண்டார்கள். அவர்மீது மகிழ்ந்து தங்கள் வேடத்தை மாற்றி, தங்கள் சுயஉருவத்தில் அவருக்குக் காட்சி அளித்தார்கள்.
“இந்த தர்மசங்கடத்திற்குத் தாங்கள் கண்ட விடையைக் கண்டு மகிழ்கிறோம். ஏதாவது வரம் கேளுங்கள்'' என்றார்கள்.
“தாங்கள் இருவரும் எனக்குக் காட்சி கொடுத்தீர்களே, இதை விட, எனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றார் முனிவர்.