பாண்டவர்களின் தூதராக ஸ்ரீகிருஷ்ணர் துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றார்.
அப்போது துரியோதனன், "கிருஷ்ணா ! உனக்காகச் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இங்கேயேத் தாங்கள் உணவு உட்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
அதற்குப் பகவான், “துரியோதனா! நான் உன்னுடைய விருந்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்று, என்னை வழிபட்டு பக்தி செய்து வரும் பாண்டவர்களையும் என்னையும் துவேஷித்தவன் நீ! அப்படி என் பக்தர்களைத் துவேஷிப்பவனுடைய உணவை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டு, நீ தர்மம் தவறி நடப்பவன், பெரியோர்களை அவமதிப்பவன். அதனால் அதர்மனான நீ அளிக்கும் அன்னத்தை நான் ஏற்க முடியாது. மூன்று, நான் இப்போது பாண்டவர்களின் தூதுவனாக வந்திருக்கிறேன். ஒரு தூதுவன் தான் வந்த காரியத்தையே முதலில் கவனிக்க வேண்டும். வந்த காரியம் முடிந்த பிறகுதான் விருந்து, வைபவம், கேளிக்கை எல்லாம். அதனால் நான் வந்த காரியம் முடிவதற்கு முன்பு விருந்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறிவிட்டார்.
இங்கு சில தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை;
* யாருடைய உணவை நாம் உட்கொள்ளலாம், யாருடைய உணவை உட்கொள்ளக் கூடாது என்று சில நியதிகள் உண்டு. அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
‘அதர்மன் அதாவது, துராத்மா ஒருவன் அளிக்கும் உணவைப் புசித்தால், அவன் செய்த பாவங்களில் பாதி, உணவு அருந்தியவரைச் சேரும்!' என்று சாஸ்திரம் சொல்கிறது.
எனவே கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுவது, யார் கொடுத்தாலும் சாப்பிடுவது என்பதை நாமாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.