குழந்தை கிருஷ்ணனின் குறும்பு அளவுக்கு மீறிப் போனது. யசோதாவினால் அவளது கடமைகளைச் செய்ய முடியவில்லை.
அவனைக் கண்டித்து உரலில் கட்டிப் போட்டால்தான் சரியாகும் என்று முயற்சி செய்தாள்.
ஆனால் 'என்ன இது! எவ்வளவு நீளமான கயிற்றைக் கொண்டு கட்ட முயற்சித்தாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு அங்குலம் குறைந்து விடுகிறதே' என்று யசோதை ஆச்சரியப்பட்டாள்.
கிருஷ்ணன் குறும்புப் பார்வையுடன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
இந்தக் காட்சியை வர்ணிக்கும் ஸ்ரீசுகப்பிரம்மரிஷி யசோதையின் நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறார்.
'பிரம்மாதி தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத அகண்ட சச்சிதானந்தத்தை இந்த யசோதை கட்டுப்படுத்த நினைக்கிறாளே! அன்புக்கல்லவா அவன் கட்டுப்படுவான்!'
யசோதையின் முயற்சியோ தொடர்கின்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவள் சோர்வடைந்தாள். இறுதியாக, பகவான் அவள் அன்புக்குக் கட்டுப்பட்டான். யசோதையோ மிகுந்த துன்பத்திற்குப் பிறகு 'ஒரு வழியாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டேன்' என்று திருப்தியடைந்தாள்.
கிருஷ்ணன் கேட்டான்: ''அம்மா என்னை ஏன் கட்டிப் போட்டாய்?''
யசோதை கூறினாள்: ''அப்படிச் செய்தால்தான் வீட்டு வேலைகளை உன் தொந்தரவு இன்றி செய்து முடிக்க முடியும்''
கட்டுண்ட கிருஷ்ணனோ யசோதையை நோக்கி கைதட்டிக் கேலியாகச் சிரித்தான்.
''ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டாள் யசோதை.
கண்ணன் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் நகைத்தான்.
அங்கே சுகப்பிரம்மமோ, 'அம்மா யசோதா, உன்னைப் பார்த்தால் எனக்கு பரிதாபமே வருகிறது. ஜென்மஜென்மமாக சம்சாரத்தில் கட்டுண்டு, துன்பத்தில் உழலுகின்ற ஜீவர்களையெல்லாம் விடுவிக்க வந்த கண்ணனை உன் உள்ளத்தில் அன்பினால் கட்டிக் குலாவி நீயும் விடுதலை பெறுவதை விட்டு அவனைக் கட்டிப்போட்டு விட்டாய். இப்போது உன்னையும் சம்சார பந்தத்தில் மறுபடியும் கட்டிக் கொள்கிறாயே? இவற்றையெல்லாம் சிந்திப்பதற்கு உனக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்று நினைத்தார்.
யசோதை வீட்டுக் கடமைகளைச் செய்யச் சென்றுவிட்டாள்.
கட்டுண்ட கிருஷ்ணனோ இரு மருத மரங்களுக்கிடையே உரலோடு தவழ்ந்து சென்றான். உரலடிபட்டு இரண்டு மரங்களும் சாய்ந்தன. அவை மருத மரங்களா? அல்ல, நாரதரிஷியினால் சபிக்கப்பட்ட நள–கூபரர்கள், குபேரனின் பிள்ளைகள். சாப விமோசனம் பெற்ற அவர்கள் கண்ணனைத் துதித்துப்பாடி தேவலோகம் சென்றார்கள்.
மரங்கள் விழுந்த பெருத்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு, யசோதை மட்டுமல்ல, கோபிகைகள் எல்லோரும் ஓடி வந்தனர்.
குழந்தை கிருஷ்ணனோ விழுந்த மரங்களுக்கிடையே இருந்து அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.
யசோதை கண்ணனை வாரியெடுத்து, 'என் குலக் கொழுந்தே' என்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.