முன்னொரு காலத்தில் சாதவாகனன் என்ற ஓர் அரசன் இருந்தான்.
அவன் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற போது, வேட்டை மும்முரத்தில் தன்னுடன் வந்த படை வீரர்களிடமிருந்து பிரிந்து விட்டான்.
அரசனுக்காகக் கொண்டு வரப்பட்ட உணவு வகைகள் படை வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டன.
பசியால் வாடிய அரசன் என்ன செய்வது என்று தெரியாமல் காட்டில் அலைந்தான்.
கடைசியில் ஒரு வேடனுடைய குடிசைக்கு வந்து சேர்ந்தான்.
வேடனுக்கு வந்தவன் அரசன் என்பது தெரியாது.
ஆனாலும் 'யாரோ விருந்தாளி வந்திருக்கிறார்!' என்று நினைத்து, அரசன் சாப்பிடத் தன்னிடம் இருந்த சத்துமாவைக் கொடுத்தான்.
சத்துமாவைச் சாப்பிட்டு அரசன் தன் பசியைத் தீர்த்துக் கொண்டான்.
பிறகு வேடன், அரசனைக் குடிசைக்குள் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு, தான் வெளியில் படுத்து உறங்கினான்.
அப்போது நல்ல குளிர்காலம். காற்று வேறு சில்லென்று அடித்தது. போதாக் குறைக்குக் கொட்டுகொட்டென்று மழை வேறு பொழிந்தது.
காற்று, குளிர், மழை எல்லாம் ஒன்று சேரவே வேடன் நடு இரவில் இறந்து போய் விட்டான்.
பொழுது விடிந்ததும் கண் விழித்த அரசன், வேடன் இறந்து போய்விட்டான் என்று தெரிந்ததும் மிகவும் வருத்தப்பட்டான்.
அப்பொழுது அரசனுடைய வீரர்கள் அங்கு வந்து சேரவே, வேடனுடைய இறுதிக் கடன்களை அரசனே முன்நின்று நடத்தினான். வேடனுடைய மனைவிக்கு அரசன் நிறையப் பொருள் கொடுத்தான்.
இருந்தும் அரசனுக்கு மனம் சமாதானம் அடையவில்லை.
தனக்கு உதவப்போய்தானே வேடன் இறந்தான் என்ற துக்கத்துடனேயே அவன் தன் ராஜ்யத்தை அடைந்தான்.
பல நாட்களாகியும் அவன் மனம் நிம்மதியடையவில்லை.
பல மாதங்கள் சென்றன.
ஒருநாள் வரருசி என்ற பண்டிதர் அரசரவையை அடைந்தார். மன்னனின் துக்கத்தை அறிந்து, அவனை அந்த ஊரிலுள்ள ஒரு பெரிய பணக்காரனின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அந்தப் பணக்காரனுக்குச் சில நாட்களுக்கு முன்புதான் ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அந்த ஆண் குழந்தையைப் பார்த்துப் பண்டிதர் வரருசி, ''அப்பா! நீ யார் என்பதை அரசனுக்குச் சொல்'' என்றார்.
உடனே அந்தப் பச்சிளம் குழந்தை, "அரசே! நான் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு சத்துமாவு கொடுத்த வேடன் நான்தான். அந்தப் புண்ணியத்தினால்தான் நான் இந்தப் பிறவியில் இந்த பணக்காரருக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன். ஆகவே தாங்கள் என்னைக் குறித்து இனியும் வருந்த வேண்டாம்" என்று சொல்லிற்று.