முன்னொரு காலத்தில் சலந்தரன் என்ற அசுரன் இருந்தான், அவன் தவங்களும் யாகங்களும் பல செய்து நிறைய வரங்களைப் பெற்றிருந்தான்.
தேவர்கள், மனிதர்கள் ஆகிய எல்லாரையும் அவன் வென்று விட்டான். அதனால் அவனுடைய அகந்தை அதிகரித்தது.
கயிலைவாழ் ஈசனையும் வென்றுவிட அவன் ஆவல் கொண்டான். அதற்காகப் படை திரட்டிக் கொண்டு அவன் இமயத்தை நோக்கிப் புறப்பட்டான்.
அவனுடைய மனைவியும் மந்திரிகளும் தகாத அந்தச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று பல முறை தடுத்தும் அவன் செவிசாய்க்கவில்லை.
கயிலாயத்தில் உமையவளுடன் அமர்ந்திருந்த ஈசன் தம் ஞானநோக்கால் சலந்தரன் வருவதை அறிந்துகொண்டார்.
தம்மை எதிர்ப்பது தவறு என்று உணர்ந்து, கடமையின் காரணமாகச் சலந்தரனுடன் வந்த மந்திரிகளையும், படைகளையும் அழிக்க அவர் விரும்பவில்லை. சலந்தரனை மட்டும் அழிக்க எண்ணிய அவர் புன்முறுவல் பூத்தார்.
ஒரு வயது முதிர்ந்த அந்தணர் போல ஈசன் உருமாறினார். கயிலையை விட்டு இறங்கிய எம்பெருமான் சலந்தரன் வரும் பாதையில் காத்திருந்தார்.
அவன் தன் பரிவாரங்களோடு அங்கு வந்து சேர்ந்தான். பெரியவர் அவன் எதிரில் சென்று நின்றார். “படையுடன் செல்லும் நீ யாரப்பா?'' என்று நடுங்கும் குரலில் அவனைக் கேட்டார்.
''ஐயா பெரியவரே, என்னைச் சலந்தரன் என்று அழைப்பார்கள். நான் இப்போது பரமசிவனோடு போரிடுவதற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியை விட்டு ஒதுங்கி நில்லும். யாராவது தள்ளிவிடப் போகிறார்கள்!'' என்றான்.
''ஓ!'' என்று தலையை மெல்ல ஆட்டினார் அந்தப் பொல்லாத மாயக் கிழவர். ''அப்பா சலந்தரா, சிவனுடன் பொருதுவதற்கு ஏற்ற அளவு சாமர்த்தியம் உனக்கு இருக்கிறதா என்று இந்தத் தள்ளாத கிழவன் சோதித்துப் பார்க்கலாமா?''
கிழவரின் கேள்வியைச் செவிமடுத்த சலந்தரன் உரக்கச் சிரித்தான்.
கிழவரை அவன் கொன்றுவிடாதிருக்க வேண்டுமே என்று மற்றவர்கள் அஞ்சினார்கள்.
''ஒரு தள்ளாத கிழவரான நீங்கள் என்னைச் சோதிக்கப் போகிறீர்களா?'' என்று அவன் இறுமாப்புடன் கூறினான்.
''ம்! செய்து பாருங்கள்!''
உடனே அந்தணர் வேடத்தில் இருந்த சிவபெருமான் தரையில் தம் கையிலிருந்த தடியால் கீறினார். அந்த இடத்தில் ஒரு சக்கரம் தோன்றியது. ''சலந்தரா, இந்தச் சக்கரத்தை மட்டும் நீ உன் தலைக்கு மேல் தூக்கிவிட்டாயானால் நீ அந்தச் சிவபெருமானை நிச்சயமாக வெற்றி கொள்வாய்'' என்று அவர் கூறியதும் சலந்தரன் இன்னும் அட்டகாசமாகச் சிரித்தான்.
தன்னுடைய ஒரு கையால் அதை அலட்சியமாகத் தூக்க அவன் முயன்றான். ஆனால், அதை அசைக்கக்கூட அவனால் முடியவில்லை.
பிறகு இரண்டு கைகளாலும் முயன்றான். அப்போதும் அது கனமாக இருந்தது. தன் முழுப் பலத்தையும் சேர்த்துக் கஷ்டப்பட்டுத் தலைக்கு மேல் அதைத் தூக்கினான்.
அவனுடைய கால்கள் தள்ளாடின. அவன் கைகள் தொய்ந்தன.
அந்தச் சக்கரம் அவனுடைய கையிலிருந்து தவறி அவனுடைய தலைமேலேயே விழுந்தது. தலை பிளக்கப்பட்ட சலந்தரன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தான்.
அவன் ஈசனுடைய அருளால் இறந்தமையால் அவனுடைய உயிர் அவருடைய பூதகணங்களில் ஒன்றாகச் சேர்ந்தது.
அவனைச் சேர்ந்த மந்திரி பரிவாரங்களுக்கு எம்பெருமானார் தம் வடிவைக் காட்டி அருள்புரிந்து மறைந்தார்.