ஒரு சமயம் நபிகள் நாயகம் அவர்கள், ஒரு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அவருடைய பகைவன் ஒருவன் குதிரையின் மேல் வந்து கொண்டிருந்தான்.
பகைவன், நபிகள் நாயகம் தனிமையில் படுத்துத் தூங்குவதைக் கவனித்தான்.
உடனே துணையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் அவரைக் கொன்றுவிட முடிவு செய்தான்.
வேகமாக வாளை உருவி அவரைக் கொல்வதற்கு நெருங்கினான்.
அப்போது நபிகள் நாயகம் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டுவிட்டார்.
அவர் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டாலும் பகைவன் அஞ்சிப் பின் வாங்கவில்லை.
வாள் தனது கையில் இருக்கிறது என்ற ஆணவத்துடன், “ஏ முகமதே! இதோ பார் கத்தி என் கையில் இருக்கிறது. சிறிது நேரத்தில் நான் உன்னைக் கொன்று விடப் போகிறேன்! இந்த நிலையில் உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்? இப்போது உன்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறது''? என்று ஆணவத்துடன் கேட்டான்.
நபிகள் நாயகம் பதற்றம் அடையவில்லை.
கடவுளை நம்பியே வாழ்ந்து பழகிய அவர், “அல்லா என்னைக் காப்பாற்றுவார். என்னுடைய உயிர் அல்லாவின் கையில் இருக்கிறது" என்று கூறினார்.
அவரது குரலில் அமைதியும் ஒருவித உறுதியும் தொனித்தன.
கத்திமுனையில் இருந்த போதும், அஞ்சாமல் அவரது குரலில் தொனித்த தெளிவு, பகைவனை நடுநடுங்கச் செய்தது. அந்த நிலையில் பயந்து போய் அவன் வாளைக் கீழே நழுவவிட்டு விட்டான்.
உடனேக் கீழே விழுந்த வாளை நபிகள் தமது கையில் எடுக்கக் கொண்டார்கள். இப்போது வாள் நபிகள் கைக்கு மாறிவிட்டது!
வாளைப் பகைவனுக்கு நேராகப் பிடித்து நபிகள், ''நண்பரே, இப்போது உங்களை யார் காப்பாற்றுவார்கள்? இப்போது உங்களுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறது?'' என்று அமைதியாகக் கேட்டார்.
ஏற்கனவே பயந்து போயிருந்த பகைவன், வாளைப் பிடித்துக் கொண்டே நபிகள் இப்படிக் கேட்டதும் மேலும் பயந்து விட்டான்.
நடுங்கிக்கொண்டே அவன், "என்னை இப்போது யாருமே காப்பாற்றமாட்டார்கள். என்னுடைய உயிர் இப்போது தங்கள் கையில் இருக்கிறது'' என்று சொன்னான்.
அதைக் கேட்ட நபிகள் பெருமான் அருள் ததும்பும் குரலில், “இல்லை நண்பரே! எல்லாம் வல்ல ஆண்டவனே உங்களையும் இப்போது காப்பாற்றுவார்'' என்று சொல்லிக் கொண்டே தமது கையிலிருந்த வாளைப் பகைவனிடமேத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
பிற்காலத்தில் அந்தப் பகைவன், நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பக்தர்களில் ஒருவன் ஆனான்.
உண்மைப் பக்தர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளுடைய செயலையேக் காண்கிறார்கள். பகைவனுக்கும் அருள் புரியும் விரிந்த நெஞ்சம் அவர்களுடையது.