ஒரு காலத்திலே ஒரு பெரிய அரக்கன் இருந்தான். அவன் ஒருநாள் இரவு மூன்று மண்டையோடுகளை எடுத்துக் கொண்டு ஓர் அரசனுடைய அரண்மனைக்குச் சென்றான்.
அரசனிடம் அவன், ''ஏ, ராஜாவே! இதோ பார். மூன்று மண்டை ஓடுகளை நான் இப்போது கொண்டு வந்திருக்கிறேன். இந்த மூன்று மண்டை ஓடுகளில் எது மிகவும் சிறந்த மண்டை ஓடு என்று நீ பதில் சொல்லியாக வேண்டும். நீ சொல்லும் பதில் சரியாக இல்லாவிட்டால், உன்னை இப்படியே நான் என் வாயிலே போட்டுக் கரகரவென்று கடித்து மென்று தின்றுவிடுவேன்'' என்று சொல்லி அரசனைப் பயமுறுத்தினான்.
அரசனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. ஏனென்றால் மூன்று மண்டை ஓடுகளுமே பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக இருந்தன! பார்ப்பதற்கு மட்டுமல்ல, எல்லாவிதத்திலுமே அவைகள் ஒன்று போலவே இருந்தன. ஆதலால் அரசனால் சட்டென்று உடனேப் பதில் சொல்ல முடியவில்லை. சரியாகப் பதிலைச் சொல்லாவிட்டால் அரக்கன் தன்னை விழுங்கிவிடுவானே என்று அரசன் மிகவும் பயந்து போய் விட்டான்.
அரசன் மிரள மிரள விழித்தான். அரக்கனோ, ''உம்! பதில் சொல். பதிலைச் சொல்கிறாயா, இல்லை உன்னைச் சாப்பிட்டு விடட்டுமா?'' என்று சொல்லி மிரட்டினான்.
அரசனுக்கு அப்போது நல்லவேளையாக ஒரு யோசனை தோன்றியது.
உடனே, அவன், ''எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். உங்களுடைய கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லி விடுகிறேன்'' என்று சொன்னான்.
அரக்கனும் அதற்கு ஒப்புக் கொண்டு மூன்று மண்டை ஓடுகளை அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனான்.
அரசனுக்கு அரக்கன் வந்துபோன பிறகு தூக்கமே வரவில்லை. எப்படி வரும்? அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டாலும், மூன்று நாளைக்குப் பிறகு அரக்கனுக்கு எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? சரியான பதிலைச் சொல்லாவிட்டால் அவன் சும்மா விடமாட்டானே!
அரசனுக்கு எதிரில் மண்டை ஓடுகள் இருந்தன. அரசன் அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இப்படியும் அப்படியும் எப்படியெல்லாமோ ஆராய்ந்து பார்த்தான். அவைகள் ஒன்று போலவே இருந்தனவே தவிர, அவைகளில் எது சிறந்த மண்டை ஓடு என்று அரசனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எதிரிலிருந்த மண்டையோடுகளைப் பார்க்கப் பார்க்க அரசனுக்கு பயம்தான் அதிகமாகியது.
மறுநாள் அரசன் தன்னுடைய சபையைக்கூட்டி, அந்த நாட்டில் இருந்த பெரிய பெரிய பண்டிதர்களை எல்லாம் வரவழைத்தான்.
அரசவைப் புலவர்கள் உட்பட, அன்றைய நாளில் சபைக்கு ஏராளமான பண்டிதர்கள் வந்து குழுமினார்கள்.
சபையின் நடுவிலே ஒரு மேசை இருந்தது. அந்த மேசையின் மீது மூன்று மண்டை ஓடுகளும் வைக்கப்பட்டிருந்தன.
அரசன், சபைக்கு வந்திருந்த பண்டிதர்களைப் பார்த்து, ''அறிஞர் பெருமக்களே, உங்களுடைய உதவி இப்போது எனக்கு அவசியம் தேவைப்படுகிறது. இங்கே உங்கள் முன்னால் மூன்று மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இவைகளில் மிகச் சிறந்த மண்டை ஓடு எது என்று ஆராய்ந்து சொல்லும்படி வேண்டிக்கொள்கிறேன்'' என்று சொன்னான்.
மூன்றும் ஒரே மாதிரியாக இருந்த மண்டை ஓடுகளை அறிஞர்கள் பார்த்தார்கள், கைகளிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவராலுமே அரசனுடைய கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. 'மூன்றுமே ஒன்றாகவே இருக்கின்றன. இவைகளில் மிகச்சிறந்தது என்று எந்த ஒன்றையுமே நிச்சயம் செய்து சொல்வதற்கில்லை' என்று சொன்னார்கள்.
அனைவருமே இப்படிச் சொல்லிவிட்டதால், அரசனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பாவம் அவன் என்னதான் செய்வான்? ஆனானப்பட்ட அறிஞர்களாலேயே, மூன்று மண்டை ஓடுகளில் எது சிறந்தது என்று சொல்ல முடியவில்லையே!
அரசன் திகைத்துக்கொண்டிருந்த சமயத்திலே, சபையின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த கிழவர் ஒருவர் எழுந்து வந்தார். அவர் தலையிலே தலைப்பாகை சுற்றியிருந்தார். கையிலே நீண்ட ஒரு கோலை வைத்திருந்தார். கொஞ்ச சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கியை ஆடையாக அணிந்திருந்தார். அவருடைய கண்கள் பார்ப்பதற்குப் பளபளப்பாக பிரகாசத்துடன் இருந்தன. அவருடைய முகத்திலே ஞானஜோதி வீசியது. வயது ஆகியிருந்தாலும் உறுதியான கட்டுடல் அவருக்கு இருந்தது. அந்தக் கிழவரின் பெயர் நரேந்திரர் என்பது. மகா மகாவிவேகி அவர். கிழவர் மேஜையின் அருகிலே சென்று மூன்று மண்டை ஓடுகளையும் கூர்ந்து பார்த்தார். பிறகு அமைதியாக ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு அந்த அந்த இடத்திலேயே வைத்தார்.
பின்பு அரசனை நோக்கித் திரும்பி, ''மகாராஜாவே, ஒரு இரும்புக்கம்பி எனக்கு இப்போது வேண்டும்'' என்று சொன்னார்.
அரசன் சைகை செய்தான். உடனே ஒரு சேவகன் ஓடிப்போய் ஒரு கம்பியைக் கொண்டு வந்து கிழவரிடம் கொடுத்தான்.
சபையில் இருந்தவர்கள் எல்லோரும் கிழவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிழவர், கம்பியை முதலாவதாக இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். அந்தக் கம்பி, மண்டை ஓட்டின் மறு காது வழியாக வெளியே வந்து விட்டது.
பிறகு கிழவர், கம்பியை எடுத்து இரண்டாவதாக .இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். அப்போது அந்தக் கம்பி, மண்டை ஓட்டின் வாயின் வழியாக வெளியே வந்தது!
பிறகு கிழவர், அதே கம்பியை மூன்றாவதாக இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். கம்பி இந்தத் தடவை மண்டை ஓட்டுக்கு கீழே, அதாவது இதயத்தை நோக்கி நேராகப் பாய்ந்து விட்டது. அந்த நிலையில் கம்பியிருப்பதே தூரத்தில் இருந்த மற்றவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.
கிழவர் அரசனை நோக்கித் திரும்பி, ''மூன்றாவதாக இருக்கும் மண்டை ஓடுதான், இங்குள்ள மூன்று மண்டை ஓடுகளிலும் மிகச்சிறந்த மண்டை ஓடு'' என்று சொன்னார்.
அவ்விதம் சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். ''மனிதப் பிறவியின் ஒரேஒரு இலட்சியம் கடவுளை அடைவதுதான். மக்களுள் ஒருவகையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடவுளைப் பற்றிய ஞான மொழிகளை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், தங்களுடைய ஒரு காதிலே வாங்கி மறுகாது வழியாக அவைகளைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதாவது அவர்களுடைய உள்ளத்தில் அந்த உண்மைகள் பதிவதும் இல்லை; கடவுளை அடைவதற்காக அவர்கள் முயற்சி செய்வதும் இல்லை. முதலாவது மண்டை ஓடு அவர்களை உணர்த்துகிறது.
“மக்களுள் இரண்டாவதாக ஒருவகையினர் இருக்கிறார்கள். கடவுளைப் பற்றிய ஞானமொழிகளைக் கேட்கும் அவர்கள், மற்றவர்களுக்கு அந்த உண்மைகளை உபதேசம் செய்வதில் மிகமிக ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களே அந்த உண்மைகளைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய உள்ளத்திலும் அந்த உண்மைகள் பதிவது இல்லை. பிறருக்குப் போதிப்பதிலேயே கருத்துச் செலுத்தும் இந்த வகையான மக்களை, இரண்டாவது மண்டை ஓடு உணர்த்துகிறது.
“மூன்றாவதாக ஒருவகை மக்கள் இருக்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் உயர்ந்தவர்கள். இவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைகளைக் கேட்ட உடனேயே, அப்படியே தங்களுடைய இதயத்தில் பதிய வைத்துக்கொள்கிறார்கள். பின்பு அந்த உண்மைகளை எழுத்துக்கு எழுத்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் சான்றோர்கள் ஆவார்கள்.
“பரமஹம்சர்களும் நல்ல உள்ளம் கொண்ட உண்மையான பக்தர்களும் இந்தப் பிரிவில் அடங்குகிறார்கள். அவர்களையே மூன்றாவதாக இங்கே வைக்கப்பட்டுள்ள மண்டை ஓடு உணர்த்துகிறது. மக்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது மண்டை ஓடு உணர்த்தும் உண்மைகளுக்கு ஏற்பவே வாழ வேண்டும். இதுவே மூன்று மண்டை ஓடுகளும் உணர்த்தும் நீதி ஆகும். ஆகவே மூன்றாவது மண்டை ஓடுதான் இங்குள்ள மண்டை ஓடுகளிலேயே மிகச்சிறந்த மண்டை ஓடு'' என்று சொன்னார் பெரியவர்.
அவருடைய விளக்கம் அரசனுக்கு முழுமையான திருப்தியைக் கொடுத்தது.
பிறகு அரக்கன் வந்தபோது, அரசன் தான் பெரியவரிடமிருந்து கேட்ட உண்மைகளைச் சொன்னான்.
அரக்கனும் அரசன் சொன்ன விளக்கத்தை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு போய்விட்டான்.