ஒரு காலத்திலே காசி நகரத்தை, பிரம்மதத்தன் என்ற ஓர் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய மகனின் பெயர் துஷ்டகுமாரன். உலகிலே பலரும் தங்களுடைய பெயருக்குப் பொருத்தமில்லாத வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லவா? ஆனால் துஷ்டகுமாரன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் தனது பெயருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும் வகையில் துஷ்டனாகவே வாழ்ந்தான்.
துஷ்டகுமாரன் நினைத்த போதெல்லாம் அரண்மனை அதிகாரிகளையும் பணியாட்களையும் துன்புறுத்தினான். பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அந்தக் குடும்பத்திற்குரிய உயர்ந்த பண்புகள் அவனுடைய ரத்தத்திலேயே ஏனோ ஒட்டாமல் போய்விட்டன. நல்லவர்கள் உச்சரிக்கவேக் கூசும் தீய வார்த்தைகளை, துஷ்டகுமாரன் வெட்கமில்லாமல் தாராளமாகப் பேசுவான். வாய்கூசாமல் அவைகளைச் சொல்லிக் கொண்டே அரண்மனையில் இருப்பவர்களை அவன் அடிப்பதும் உண்டு.
அரக்க மனம் படைத்த துஷ்டகுமாரனை யார்தான் விரும்புவார்கள்?
அரண்மனை அதிகாரிகளுக்கு இளவரசனின் செய்கைகள் கொஞ்சமும் கூடப் பிடிக்கவில்லை. இளவரசன் ஆயிற்றே என்று, துஷ்டகுமாரன் இழைத்த அவ்வளவு துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு, வாய் பேசாமல் உள்ளத்தில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். பாவம், அவர்களால் அப்போது வேறு என்ன செய்ய முடியும்?
ஒருநாள், துஷ்டகுமாரன் ஆற்றில் போய்க் குளிக்கலாம் என்று நினைத்தான்.
அவன் அரண்மனை வேலைக்காரர்களிடம், ''நான் ஆற்றில் குளிக்க வேண்டும். அதுவும் நடு ஆற்றில் குளிக்க வேண்டும். என்னை நீங்கள் அங்கே அழைத்துப் போங்கள்'' என்று கட்டளையிட்டான்.
இவ்விதம் துஷ்டகுமாரன் அட்டகாசமாகச் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.
அரண்மனை வேலைக்காரர்களுக்குத் துஷ்டகுமாரனைக் கண்டாலேப் பிடிக்காது. அவன் மீது அளவில்லாத வெறுப்பு கொண்டிருந்த வேலைக்காரர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துஷ்டகுமாரனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்கள். இளவரசன் விரும்பியபடியே அவனை நடு ஆற்றுக்குக் கொண்டு போனார்கள்.
அந்தச் சமயத்தில் மாலை சாய்ந்து இருள்சூழ ஆரம்பித்துவிட்டது. தனியாக தங்களுடன் வந்திருந்த துஷ்டகுமாரனை நடு ஆற்றில் மூழ்கும்படி செய்தார்கள். பிறகு, 'பாவி ஒழிந்தான். இனிமேல் நமக்குத் தொல்லையில்லை' என்று மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பி விட்டார்கள்.
அரசனாகிய பிரம்மதத்தன், தன்னுடைய மகனைப் பற்றி வேலைக்காரர்களிடம் விசாரித்தான்.
வேலைக்காரர்கள் உண்மையைச் சொல்லவில்லை.
அரசனிடம் அவர்கள் ஏதேதோ சாக்குப்போக்குகள் சொல்லி, இளவரசனைப் பற்றிய உண்மை எதுவும் அரசனுக்குத் தெரிய வொட்டாமல் மழுப்பி மறைத்து விட்டார்கள்.
பிரம்மதத்தன், தன்னுடைய அதிகாரிகள் பலரையும் அழைத்து, 'இளவரசனை எப்படியாவது தேடிக் கொண்டுவந்து விடுங்கள்' என்று சொல்லி அவர்களைப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தான்.
ஆனால் அப்படிச் செய்தும் அவனுக்கு இளவரசனைப் பற்றிய தகவல் ஒன்றுமே கிடைக்கவில்லை.
அங்கே ஆற்றில் மூழ்கடித்ததால் துஷ்டகுமாரன் செத்துப்போகவே இல்லை.
சிறிது நேரம் அவன் ஆற்றில் தத்தளித்தான். பிறகு அங்கே தற்செயலாக மிதந்து வந்த ஒரு பெரிய கட்டையைப் பற்றிக் கொண்டு அதன் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டான்.
ஒரு காலத்தில் அதே ஆற்றின் கரையிலே ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான்.
அவன் நாற்பது கோடி பவுன் நாணயங்களைச் சேர்த்து, யாருக்கும் தெரியாமல் அந்த ஆற்றின் கரையிலிருந்த ஒர் இடத்தில் இரகசியமாகப் புதைத்து வைத்திருந்தான்.
அந்த வியாபாரி மரணம் அடைந்த பிறகு, அதே ஆற்றங்கரையில் ஒரு பாம்பாகப் பிறக்க நேர்ந்தது! பாம்புப் பிறவியிலும் அவனுக்குப் பழைய ஞாபகம் இருந்தது. கர்மம் யாரைத்தான் விட்டது பாருங்கள்! பாம்புப் பிறவியெடுத்த நிலையில் அவன், தான் சேர்த்து வைத்த புதையலின் அருகிலேயேயிருந்து அதைக் கவனமாகப் பாதுகாத்து வந்தான்.
அந்த வியாபாரியைப் போலவே மற்றொரு வியாபாரி இருந்தான். இந்த வியாபாரி, முப்பது கோடி பவுன் நாணயங்களை அதே ஆற்றங்கரையில் புதைத்திருந்தான்.
அவன் மரணம் அடைந்து, அடுத்தப் பிறவியில் ஒரு எலியாக அந்த ஆற்றங்கரையில் பிறவி எடுக்க நேர்ந்தது. எலிப்பிறவியில் அவன், தான் புதைத்து வைத்த புதையலின் அருகிலேயே வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் கடுமையான மழை பெய்தது. அதன் விளைவாக பாம்பின் வளையிலும், எலியின் வளையிலும் தண்ணீர் புகுந்தது. அவைகள் இரண்டும் இளவரசன் வந்து கொண்டிருந்த மரத்துண்டை அடைந்து உட்கார்ந்தன.
ஆற்றங்கரையின் அருகில் ஒரு மரத்தில் ஒரு கிளி வாழ்ந்து வந்தது.
அது எப்படியோ தவறி ஆற்றில் விழ, ஆறு அந்தக் கிளியை அடித்துப் போக ஆரம்பித்தது.
சிறிது தூரம் வரையிலும் சிரமப்பட்டுத் தத்தளித்த கிளி, துஷ்டகுமாரனும் பாம்பும் எலியும் உட்கார்ந்திருந்த அதே மரத்தை அடைந்து உட்கார்ந்தது.
புத்தர் பெருமான், அப்போது அந்தப் பிறவியில் ஒரு சன்னியாசியாக இருந்தார். அவர் அந்த ஆற்றங்கரையில் ஒரு சிறிய குடிசையைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
துஷ்டகுமாரன் உட்கார்ந்திருந்த கட்டை., போதிசத்துவரின் ஆஸ்ரமம் இருந்த பக்கமாக ஆற்றிலே மிதந்து போயிற்று. துஷ்டகுமாரன் கோவென்று கதறி அழுது கொண்டிருந்தான்.
இளவரசனின் அழுகுரலைக் கேட்ட புத்த பகவானாகிய சன்னியாசி வெளியே வந்து பார்த்தார்.
அவருக்குத் துஷ்டகுமாரனைக் காப்பாற்றும் எண்ணம் தோன்றியது.
ஆனால், வேகமாக ஆறு அடித்துச் செல்லும் கட்டை மேல் இருப்பவனைக் காப்பாற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஆனாலும் மனம் தளராத போதி சத்துவர், எவ்வளவோ பாடுபட்டுக் கட்டையைக் கரைக்கு இழுத்து வந்துவிட்டார்.
பிறகு நெருப்பு மூட்டி துஷ்டகுமாரன், பாம்பு, எலி, பறவை ஆகியோர்களுடைய குளிரை நீக்கி உதவினார். வயிறாற உணவளித்து அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார்.
ஆற்றிலிருந்தும் குளிரிலிருந்தும் பசியிலிருந்தும் தங்களைக் காத்தருளிய சன்னியாசிக்கு நால்வரும் நன்றி தெரிவித்தார்கள்.
அப்போது பாம்பு, ''ஐயா, என்னிடம் நாற்பது கோடி பவுன் நாணயங்கள் இருக்கின்றன. அவைகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று சாதுவிடம் சொல்லியது.
எலி, தன்னுடைய முப்பது கோடி நாணயங்களை ஏற்றுக்கொள்ளும்படி சன்னியாசியிடம் வேண்டியது.
கிளி, சாதுவுக்கு சவ்வரிசியைத் தர முன் வருவதாகச் சொல்லியது.
இளவரசன், ''நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம். உங்களுக்கு வேண்டியதை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். உங்களை வரவேற்று உபசரிக்க நான் தயாராகக் காத்திருக்கிறேன்'' என்று சாதுவிடம் சொன்னான்.
பிறகு நால்வரும் சன்னியாசியிடம் விடைபெற்றுக் கொண்டு, தங்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
சில காலம் கடந்தது. அரசன் பிரம்மதத்தன் காலமானான். அவனுக்குப் பிறகு துஷ்டகுமாரன் அரியணையேறி அரசாளத் துவங்கினான்.
ஒருசமயம் போதிசத்துவருக்கு மேலேக் கூறப்பட்ட நான்கு பேர்களுடைய ஞாபகம் வந்தது.
அவருக்கு அவர்களிடமிருந்து பெறக்கூடியது ஒன்றுமே இல்லை என்றாலும் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், அவர்களுடைய மன நிலையைச் சோதிப்பதற்காகவும் போதிசத்துவர் புறப்பட்டுப் போனார். பாம்பு, அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தது. புதையலைச் சுட்டிக் காட்டி, ''இதிலுள்ள நாற்பது கோடி பவுன் நாணயங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சாதுவிடம் சொன்னது.
ஆனால், அவர் அந்தப் புதையலை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
பிறகு எலியிடமும் கிளியிடமும் சென்றார்.
அவைகளும் நல்ல பாம்பைப் போலவே சன்னியாசியை வரவேற்று உபசரித்து, தங்களிடம் உள்ளவைகளை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டின.
சொன்ன சொல் தவறாமையும், நன்றியுணர்வும் அவைகளிடம் இருந்ததை போதிசத்துவர் கண்டார்.
ஆனால், அவைகள் கொடுக்க முன்வந்த பொருள்களையும் ஏற்க மறுத்துவிட்டு துஷ்டகுமாரனைக் காண்பதற்காக அரண்மனையை நோக்கிப் பயணமானார்.
சாதுவைக் கண்ட மாத்திரத்திலேயே துஷ்டகுமாரன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து, ''இதோ, யாரோ ஒரு ஏமாற்றுப் பேர்வழி இங்கே வந்திருக்கிறான். இவனை அடித்து நொறுக்குங்கள். பிறகு கழுவில் கொண்டுபோய் ஏற்றுங்கள்!'' என்று சொன்னான்.
அரசன் சொன்னபடியே போதிசத்துவரை அரண்மனை அதிகாரிகள் சூழ்ந்து கொண்டார்கள். அவரைப் பலமாக அடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
போதிசத்துவர் பதில் ஒன்றுமே பேசவில்லை. வேலைக்காரர்கள் கொடுத்த அடிகள் அத்தனையையும் வாய் பேசாமல் மௌனமாக இருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
அப்போது ஒரே ஒரு சமயம் மட்டும் அவர், ''மனிதர்களை ஆற்றிலிருந்து எடுத்து கரையேற்றுவதை விடவும் மரக்கட்டையை எடுத்து தரையேற்றுவதே மேலானது என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது மிகவும் சரி'' என்று சொன்னார்.
இப்படி போதிசத்துவர் கூறியதும், வேலைக்காரர்கள் அவரை அடித்து நொறுக்குவதை நிறுத்தினார்கள்.
“ஏன் இப்படிச்சொல்கிறீர்கள்? உங்களுக்கு எங்கள் அரசரை ஏற்கனவே தெரியுமா? அவருக்கு நீங்கள் எப்போதாவது, எந்த உதவியாவது செய்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.
போதிசத்துவர், தாம் ஒருசமயம் துஷ்டகுமாரனை ஆற்றிலிருந்து கரையேற்றுவித்ததைச் சொல்லி, ''அதனுடைய பலனைத்தான் இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னார்.
இவ்விதம் போதிசத்துவர் சொன்னதும், அருகிலிருந்தவர்கள் வியப்படைந்து போனார்கள். அதோடு அவர்களுக்கு அரசன்மீது கோபம் கோபமாக வந்தது.
''தன்னுடைய உயிரையே காத்த ஓர் உத்தமரை, அரசன் கழுவில் ஏற்றுங்கள் என்று கட்டளையிட்டானே! எப்படிப்பட்ட பாதகன் நமக்கு அரசனாக இருக்கிறான்! நன்றி என்பது மருந்துக்கும் இல்லாத இந்த நயவஞ்சகன், நமக்கு என்ன பெரிதாக நன்மையைச் செய்வான் என்று எதிர்பார்க்க முடியும்? இப்படிப்பட்டவனை இனியும் அரசனாக வைத்திருக்கக்கூடாது'' என்று அரண்மனையிலிருப்பவர்களே உறுதியான ஒரு முடிவுக்கு வந்து, துஷ்டகுமாரனைக் கொன்று ஆற்றில் போட்டு விட்டார்கள்.
அதோடு போதிசத்துவருக்குப் பட்டம் சூட்டித் தங்களுடைய அரசனாகவும் அரியணையில் அமர்த்தினார்கள்.
சிறிது காலம் கடந்தது. போதிசத்துவர் மீண்டும் பாம்பையும் எலியையும் கிளியையும் பார்த்து வருவதற்காகக் கிளம்பினார். பாம்பு, தான் அதுவரையிலும் பாதுகாத்து வந்த புதையலை போதிசத்துவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தது.
எலியும் அவருக்குத் தன்னுடைய புதையலை மனமுவந்து கொடுத்தது.
கிளி, “சவ்வரிசியைக் கொண்டு வந்து விடுகிறேன்'' என்று சொன்னது.
அதற்குப் பதிலாக போதிசத்துவர், ''இப்போதைக்கு சவ்வரிசிக்கு அவசியம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என்று சொன்னார்.
பிறகு அவர் பாம்பு, எலி, கிளி ஆகியவைகளுடன்கூடி தமது வாழ்நாட்களை மனநிறைவோடு கழித்தார்.