ஒரு சமயம், சமர்த்த ராமதாசர் சீடர்கள் புடைசூழ சிவாஜியைப் பார்த்து வருவதற்காகக் கிளம்பினார். பல மணி நேரம் அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. நீண்டநேரம் நடந்ததாலும், வெய்யிலாலும், பசியாலும், சாதுக்கள் பயணத்தின் இடையிலேயே மிகவும் களைத்துச் சோர்ந்து விட்டார்கள். ஆகவே சாதுக்கள் கூட்டம் ஒரு மரத்தடியில் இளைப்பாறுவதற்காகத் தங்கியது.
பசியோடிருந்த சாதுக்களில் சிலர், அருகில் ஒரு தோட்டத்தில் கரும்புப் பயிர் நன்றாக ஓங்கி வளர்ந்திருந்ததைப் பார்த்தார்கள். கரும்பை ஒடித்துச் சாப்பிடும் எண்ணத்துடன், யாருடைய அனுமதியையும் பெறாமலேயே அவர்கள் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்துவிட்டார்கள்! பசிக்கு ஆறுதலாகக் கரும்பை ஓடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு சமர்த்த ராமதாசருக்கும் கரும்பை ஒடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள்.
சிறிது நேரத்திற்குள் சாதுக்கள் இருந்த இடத்திற்குத் தோட்டத்தின் சொந்தக்காரன் வந்து சேர்ந்தான். அவன் அந்தச் சாதுக்களை முன்பின் பார்த்தது கிடையாது. மகானாகிய சமர்த்த ராமதாசர், சிவாஜி மகாராஜாவின் குரு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் ராமதாசரை அவன் நேரில் அதுவரையிலும் பார்த்தது இல்லை.
'இந்தச் சாதுக்கள் திருட்டுத்தனமாகத் தோட்டத்தில் புகுந்து கரும்பைத் திருடிச் சாப்பிட்டிருக்கிறார்கள்' என்று அறிந்த போது, தோட்டக்காரனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆகவே அவன், அங்கிருந்த எல்லாச் சாதுக்களையுமே பலமாக அடிஅடி என்று அடித்து நொறுக்கினான்!
சாதுக்களில் ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தோட்டக்காரன் கொடுத்த அவ்வளவு அடிகளையும் மௌனமாக இருந்து அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பிறகு அங்கிருந்து பயணப்பட்டு சிவாஜியின் அரண்மனையை அடைந்தார்கள்.
குருவையும் சாதுக்களையும் கண்டதுமே சூரியனைக் கண்ட தாமரையைப் போல சிவாஜி மன்னனின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கித் ததும்பியது. அவர்களை அன்பும் மரியாதையும் கொண்டு உபசாரங்களுடன் வரவேற்றார் அரசர்.
சாதுக்கள் வழியில் நேர்ந்த சம்பவத்தை ஒருவருக்கும் சொல்லவில்லை. ஆகவே மக்களுக்கோ, சிவாஜிக்கோ, அரண்மனை அதிகாரிகளுக்கோ நடந்த விஷயம் தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.
சாதுக்கள் நீராடி வருவதற்காக சிவாஜி மன்னர் ஏற்பாடு செய்தார்.
தமது குருவாகிய ராமதாசரை நீராட்டும் பொறுப்பை அரசரே ஏற்றுக்கொண்டார். ராமதாசரை நீராட்டும்போது சிவாஜி, குருவினுடைய உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ராமதாசரின் உடல் முழுவதும் பலமாக தாக்கப்பட்டதற்கான அடையாளத் தழும்புகள் இருந்தன!
குருவிடம் அத்யந்த பக்தி பூண்டிருந்த சிவாஜி மன்னரின் உள்ளம், ராமதாசரின் உடலில் தென்பட்ட தழும்புகளைக் கண்டு, எப்படி எப்படி எல்லாம் துடிதுடித்திருக்கும் என்பதை எழுத்தில் வடிக்கவே முடியாது. நாம் அதைக் கற்பனைக் கண்கொண்டுதான் ஓரளவிற்காவது புரிந்துகொள்ள முடியும். கன்னிப்போயிருந்த குருவின் உடலைக் கண்டு அனலிடைப் புழுவாகத் துடிதுடித்த சிவாஜி, அதற்கான காரணத்தைச் சொல்லும்படி ராமதாசரிடம் கேட்டார்.
இத்தகைய அடாத காரியம் செய்த கொடியவர்களை உடனடியாகச் சிறைபிடித்து வந்து தண்டிக்க வேண்டும் என்ற ஆவேசம் அவருக்கு எழுந்தது.
ஆனால் பலமுறை சிவாஜி மன்னன் கேட்டுக்கொண்டும், சீடரின் கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே ராமதாசர் பாராமுகமாகவே இருந்து விட்டார்.
ராமதாசர் அப்படியிருந்தாலும் சீடராகிய சிவாஜி அமைதியடைந்து சும்மா இருந்துவிட முடியாதல்லவா? அரசர், மற்றைய சாதுக்கள் மூலம் நடந்த விபரத்தைத் தெரிந்து கொண்டு விட்டார்.
உடனே அரண்மனையிலிருந்த அதிகாரிகள் கரும்புத் தோட்டத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். தோட்டக்காரனை அரசரின் முன்பு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.
அப்போது தெய்வாதீனமாக சிவாஜியின் அருகில் ராமதாசரும் இருந்தார்.
தோட்டக்காரனைக் கண்டதும் ராமதாசர், 'இவரை இங்கே அழைத்து வந்திருப்பதற்கான காரணம் என்ன?' என்று கேட்டார்.
சிவாஜி மன்னர், 'சாதுக்களுக்குத் துன்பம் இழைத்த இவனுக்குப் பாடம் புகட்டும் வகையில் சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று சொன்னார்.
ராமதாசர், "இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையே. அவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில், அவருடைய அனுமதியைப் பெறாமலேயே சாதுக்கள் நுழைந்தது குற்றம். ஆகவே அவர் சாதுக்களைத் தண்டித்தது முற்றிலும் நியாயமானது.
“தவறு எங்களுடையதாக இருக்க, அவரைப்போய் நீங்கள் தண்டிக்க நினைப்பது நீதி ஆகாது. முதலாவதாக அவருடைய தோட்டத்திற்கு நாசம் ஏற்பட்டது. இரண்டாவதாக, இப்போது இவ்வளவு தூரம் வரவேண்டிய சிரமத்தையும் அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மூன்றாவதாக, தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்றும் அவர் பயந்து கொண்டிருக்கிறார். இவ்விதம் இவருக்கு நேர்ந்துள்ள எல்லாத் துன்பங்களுக்குமாகச் சேர்ந்து, ஐந்து கிராமங்களை இவருக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டும்'' என்றார்.
பிறகு என்ன? குருவின் பேச்சைத் தட்டக்கூடியவரா சிவாஜி? மரண தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த தோட்டக்காரன், ஐந்து கிராமங்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு ஜாம் ஜாம் என்று வீடு போய்ச் சேர்ந்தான்.
ராமதாசர் மட்டுமல்ல, உண்மையான துறவிகள் அனைவருமே இத்தகைய கருணை உள்ளம் கொண்டவர்கள்தான். இந்த வரிசையில் பல மகான்களை நமது தாயகம் ஈன்றெடுத்திருக்கிறது. நாம் அவர்களுடைய பரம்பரையில் வந்தவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.