ஒரு நகரத்திலே தேவதாசன் என்பவன் இருந்தான். அவன் பல புராணங்களையும், சாஸ்திரங்களையும் நன்றாகப் படித்திருந்தான்.
தேவதாசன் சாதாரண ஆசார அனுஷ்டானங்களையும் கூட மிகக் கடுமையாகப் பின்பற்றி வந்தான். சமயச் சின்னங்களும், அடையாளங்களும் அவனுடைய உடலை அலங்கரித்தன.
ஒரு நாள் தேவதாசனுக்குப் புதுமையான ஆசை தோன்றியது. அதாவது, கடவுளைக் காண வேண்டும் என்று அவன் விரும்பினான்.
கடவுள், மேலே ஏதோ ஒரு உலகத்தில் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவனுடைய எண்ணம். என்றோ ஒரு நாள் கடவுள் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்து தனக்குக் காட்சி கொடுப்பார் என்று நம்பி வந்தான்.
ஒவ்வொரு நாளும் தவறாமல் கோயில்களுக்குச் சென்று வழிபட்டான். அவன் கோயில்களின் முன்னால் சிதறவிட்ட தேங்காய்களுக்கு ஓர் அளவே இல்லை.
தேவதாசனின் செலவில் தெய்வங்களின் விக்கிரங்களுக்கு நாள்தோறும் குடம் குடமாகப் பால் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகங்களுக்கும், யாகங்களுக்கும் அவன் தாராளமாகப் பணம் செலவு செய்தான்.
கடவுளைக் காணவேண்டும் என்பதற்காக தேவதாசன் இவ்வளவு காரியங்களையும் செய்து பார்த்தான். ஆனால், சொர்க்கத்திலுள்ள அவனுடைய கடவுள் கீழே இறங்கி வரவுமில்லை. அவனுக்குக் காட்சிக் கொடுக்கவுமில்லை.
தேவதாசன் ஒரு சிறந்த பக்தன் என்று ஊரில் உள்ளவர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து ஏழை எளியவர்கள், அகதிகள், அனாதைகள் எல்லாம் அவனிடம் சிறு சிறு உதவிகள் கேட்டு வர ஆரம்பித்தார்கள்.
தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களை எல்லாம் தேவதாசன் வெறும் கையோடு திருப்பி அனுப்பிவிட்டான். அவனுடைய அன்பு முழுவதும் யாருமே பார்த்திராத சொர்க்கத்தில் உள்ள கடவுளிடமே இருந்தது.
தேவதாசனுக்குக் கடவுளைக் காணவேண்டும் என்ற ஆசை மேலும் தீவிர மாகியது. இன்னும் அதிகமாக ஆசார அனுஷ்டானங்களை மிக மிக தீவிரமாக அனுஷ்டித்தான்.
உபவாசங்கள் இருந்தான். சமய சம்பந்தமான புத்தகங்களை எல்லாம் திரும்பத் திரும்ப படித்தான். ஆனால் அவன் பகவானை மட்டும் பார்க்கவில்லை.
வேதங்களைப் படித்தான், கீதை பாராயணம் செய்தான். ஆனால் கடவுள் மட்டும் வரவே இல்லை.
தேவார, திருவாசகங்களை உருப் போட்டான். ஆனாலும் சிவபெருமானின் காட்சி கிடைக்கவில்லை.
குரானை ஓதினான்; பைபிளைக் கற்றுத் தேர்ந்தான். ஆனால் பரமபிதா வரவில்லை.
கடவுளைத் தரிசிப்பதற்குத் தேவதாசன் நீண்ட தூரங்களிலுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கும் யாத்திரை செய்தான்.
கயையிலும் காசியிலும் கடவுளைத் தேடினான்.
கையிலை மலையிலும் கன்னியாகுமரியிலும் சிரமப்பட்டு இறைவனைத் தேடினான்.
மசூதியிலும் தேவாலயங்களிலும், மண்டியிட்டுத் தொழுதான். தெய்வத்தைத் தேடி உலகமெல்லாம் அலைந்தான்.
என்ன ஆச்சரியம்! அவன் தேடிய கடவுளை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஒரு நாள் தேவதாசன் கடவுளைத் தேடிக்களைத்தவனாக ஒரு சத்திரத்திலே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.
தான் எங்கு தேடியும் தனக்குக் கடவுள் தரிசனம் தரவில்லையே என்று தேவதாசன் மிக மிக வருந்தினான்.
'தெய்வமே! உன்னை நான் உலகமெல்லாம் தேடிக்களைத்து விட்டேனே? இன்னும் நீ மனம் இரங்கவில்லையா? உன்னை நான் பார்க்கவே முடியாதா?' என்று தேவதாசன் புலம்பினான்.
உடனே அவன் தங்கியிருந்த அறைக்குள் ஒரு பெரிய ஜோதி தோன்றியது.
ஆண்டவனின் குரல் அசரீரியாக அந்த அறையிலே ஒலித்தது:
"தேவதாசா! என்னை ஏன் அங்கும் இங்குமாகத் தேடி அலைகிறாய்? நான் உன்னைத் தேடி ஒவ்வொரு நாளும் உன் வீட்டுக்கு வந்தேன்.
''ஏழையாய் உன்னிடம் யாசகம் கேட்டு வந்தேன். நீ என் பசியைத் தீர்க்கவில்லை. அகதியாய் உன்னை அண்டினேன். என்னை நீ ஆதரிக்கவில்லை. அனாதையாய் உன்னிடம் வந்தேன். நீ எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. கைம்பெண்ணாக உன் வீடு தேடி வந்தேன். நீ என் கண்ணீரைத் துடைக்கவில்லை.
"அன்பனே! என்னை மசூதியிலோ, அல்லது மலையிலோ குகையிலோ தேடுவதால் மட்டும் பயனில்லை. நான் வேதங்களிலோ புராணங்களிலோ ஆகமங்களிலோ கோயில் கொள்ளவில்லை. கங்கைக் கரையில் கிணறு தோண்டுவது முட்டாள் தனம் அல்லவா? கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடி தேடுவதா? மக்கள் வடிவத்திலே நான் இருக்கிறேன். மனிதனின் ஆத்மாவாக நானே இருக்கிறேன்.
"எவனொருவன் என்னை-ஏழை எளியவர்கள், அகதிகள் அனாதைகள், கைம்பெண்கள், திக்கற்றவர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பாமரர்கள் ஆகியவர்களிடம் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய்கிறானோ-அவனே என்னுடைய தலைச்சிறந்த பக்தன். அவன் என்னை வெளியில் தேடி அலைய வேண்டிய அவசியம் கூட இல்லை. நான் அவனிடம் வாழ்கிறேன். அவன் என்னிடம் வாழ்கிறான்'' என்று தெய்வத்தின் குரல் அசரீரியாக ஒலித்து ஓய்ந்தது.
தேவதாசன் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தான். அப்போது முதல் கடவுளை மக்கள் வடிவில் பார்த்துச் சேவை செய்யத் தொடங்கினான்.
‘ஒரு பேரொளியாகிய தெய்வத்தின் ஒளிக்கதிர்கள் போன்றவர்களே மக்கள். மனிதனுக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தலை சிறந்த வழிபாடாகும்' என்று தேவதாசன் உணர்வு பெற்றான்.
தேவதாசன் மனிதனில் ஈசனைக் கண்டான். மனித சேவையில் இன்பமும், சாந்தியும், திருப்தியும் அடைந்தான்.
அதுவே அவனை மிகப்பெரும் நிலைக்கு உயர்த்தியது.