அயோத்தியில் அரண்மனையில் ஸ்ரீராமரும் சீதையும் இருந்த போது நடந்த ஒரு நிகழ்வு இது:
ஒரு நாள் சீதாதேவி, "நான் வளர்க்கும் ஆசைக்கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று ஸ்ரீராமரிடம் கேட்டாள்.
புன்முறுவல் பொங்க ஸ்ரீராமர், "என் பிரியமுள்ள அன்னையாகிய கைகேயின் பெயரை உன் ஆசைக்கிளிக்கு வை” என்றார்.
ஸ்ரீராமர், கைகேயின் பெயரைக் கிளிக்குச் சூட்டியதற்குக் காரணமென்னவென்று நினைக்கிறீர்கள்?
கிளிக்கு ஒரு பழக்கம் உண்டு. அதற்குத் தனக்குத் தானே சிந்தித்துப் பேசத் தெரியாது. அது மற்றவர்கள் சொல்வதைத்தான் திருப்பிச் சொல்லும். அதுபோல் கைகேயி, ஸ்ரீராமர் வனவாசம் மேற்கொள்ளக் காரணமான வரங்களைத் தானாகக் கேட்கவில்லை. அவள் கூனி சொன்னதையேத் திரும்பச் சொன்னாள். சொன்னதைச் சொல்லும் கிளிக்கு அதேக் குணமுடைய கைகேயி பெயர் வைக்கப்பட்டது.