வேதாத்ரி மகரிஷி பேசிக் கொண்டிருக்க மன வளக் கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? மூன்று பண்புகள் :
1. விட்டுக்கொடுப்பது, 2. அனுசரித்துப் போவது, 3. பொறுத்துப் போவது.
இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
உடனே ஒரு பேராசிரியை எழுந்து, "விட்டுக் கொடுப்பது என்று பொதுவாகச் சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்னையே அங்குதானே ஆரம்பம்!” என்று கேட்டார்.
எல்லோரும் ஆவலோடு வேதாத்ரி மகரிஷியின் முகத்தைப் பார்த்தார்கள்.
அவர் கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?
வேதாத்ரி மகரிஷி சிரித்தபடி, "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்தான் விட்டுக் கொடுப்பார். அவர்தான் அனுசரித்துப் போவார்'' என்றதும், அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.