வேள்வி செய்யும் பொழுது அதைச் செய்பவர் அனைத்தையும் தானம் செய்துவிட வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் தன் தந்தை அவ்விதம் செய்யவில்லை என்பதை நசிகேதன் கண்டான்.
அவன் வேள்வியின்போது தந்தை செய்த அனைத்துச் செயல்களையும் கவனித்துக் கொண்டு வந்தான். என்றாலும், தந்தையைத் தடுத்து ஏதேனும் சொல்வது மரியாதைக் குறைவானது என்பதால் சும்மா இருந்தான்.
வேள்வி செய்பவர் அனைத்தையும் தியாகம் செய்துவிட வேண்டும் என்ற நியதியைத் தந்தைக்கு நினைவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு நசிகேதன் தந்தையிடம், ''அப்பா! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டான். தந்தை பதில் பேசவில்லை.
ஆனால் சிறுவன் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை அதேக் கேள்வியைக் கேட்டதால், அவன் தந்தை சிறிது எரிச்சலுடன், ''உன்னை யமனுக்கு (மரணதேவனுக்கு)க் கொடுக்கப் போகிறேன்'' என்றார்.
தந்தையின் வாக்கை அப்படியே நிறைவேற்றும் எண்ணத்துடன் நசிகேதன் யமலோகம் சென்றான். அங்கு அப்போது யமன் வீட்டில் இல்லை.
யமனைக் காணும்பொருட்டு அவன் வீட்டின் முன்னால் மூன்று நாள் அன்ன ஆகாரமின்றிக் காத்துக் கிடந்தான் நசிகேதன்.
யமன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், தன் வீட்டுக்கு வந்த விருந்தினனை உபசரிக்காமல் காக்க வைத்தற்காக வருந்திச் சிறுவனிடம், '`இந்த அவமரியாதைக்காக என்னை மன்னிக்க வேண்டும். மூன்று நாள் காத்திருந்ததற்காக நான் உனக்கு மூன்று வரங்களைத் தருகிறேன், கேள்'' என்றான்.
முதல் வரமாக நசிகேதன், ''யமலோகத்திலிருந்து நான் வீடு திரும்பியதும், என் தந்தை என்னை அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கேட்டான்.
இரண்டாம் வரம், ஒரு வேள்வி சம்பந்தமானது. அதற்கு உடனே யமன் சம்மதித்துவிட்டான். அன்று முதல் அந்த வேள்விக்கு 'நசிகேத வேள்வி' என்ற பெயர் வழங்கலாயிற்று.
மூன்றாவது வரமாக நசிகேதன், ''மனிதனின் மரணத்துக்குப் பின்னர், ஆன்மா இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்; `அப்படி ஒன்றும் இல்லை இருப்பதில்லை' என்று வேறு சிலர் கூறுகிறார்கள். இதுபற்றிய உண்மையைத் தங்களிடமிருந்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கேட்டான்.
அதற்கு யமன், ''இதற்குப் பதில் தெய்வங்களுக்குக் கூடத் தெரியாதே! இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறாய்? என்னிடம் வேறு ஏதாவது வரம் கேள். அரசாட்சி, மிகுந்த செல்வம் கொழிக்கும் மாளிகை, சுவர்க்கம், ஆடல் பாடல் மற்றும் இவை போன்ற இன்பம் தரும் பொருள்கள் இப்படி எவை வேண்டுமானாலும் கேள்; தருகிறேன். ஆனால் மரணத்தைப் பற்றிய அந்தக் கேள்வியை மட்டும் கேட்காதே'' என்றான்.
பிறகு நசிகேதன், ``இந்த ஆடல் பாடல் போன்றவையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என் ஆயுள் முடிந்து என்னை நீங்கள் அழைத்துக் கொண்டால், பிறகு இந்தப் பொருளெல்லாம் எனக்குத் தொடர்பில்லாமல் போய்விடும். பிறகு என்னுடையது என்று ஒன்றும் இருக்காது. நிலையற்ற இந்தப் பொருள்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு அந்த மூன்றாவது கேள்விக்கு உரிய பதில்தான் வேண்டும்'' என்று திட்டவட்டமாகக் கூறினான்.
பிறகு யமன், நசிகேதனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், அந்தக் கேள்வி ஆன்மாவைப் பற்றியதாகையால், அவனுக்கு ஆத்மஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று நினைத்தான்.
நசிகேதனுக்கு ஆத்மஞானத்தை ஏற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா? என்பதைச் சோதிப்பதற்காகவே, அந்தக் கவர்ச்சியூட்டும் பொருள்களையெல்லாம் தருவதாக யமன் முதலில் கூறினான்.
நசிகேதன், ``இந்தப் பொருளெல்லாம் எனக்குத் தேவையில்லை; ஆடல் பாடல் போன்றவையெல்லாம் உனக்கே உரியனவாக இருக்கட்டும்; எனக்கு வேண்டாம்'' என்று அவற்றைப் புறக்கணித்துவிட்டு, ``என் கேள்விக்கு உரிய பதில்தான் வேண்டும்'' என்று உறுதியாகக் கூறினான்.
பிறகு யமன் ஆத்மஞானத்தை நசிகேதனுக்கு உபதேசித்தான்.