கங்கைக் கரையில் முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஓர் இரத்தினக் கல் இருந்தது. இரும்பைப் பொன்னாக்கும் சக்தியுள்ளது அந்த இரத்தினம். அதை அறிந்த ஒரு மனிதன் எப்படியாவது அதைப் பெற வேண்டும் என்று நினைத்தான். முனிவரை அணுகித் தன்னைச் சீடராக ஏற்க வேண்டுமென்று கோரினான். முனிவர் இசைந்தார். குருவும் சீடரும் வெகு காலம் ஒரே குடிசையில் வாழ்ந்தார்கள். சீடன் முனிவருக்கு வேண்டிய பணிவிடையெல்லாம் செய்து வந்தான்.
ஒரு நாள் முனிவர் கங்கைக்குக் குளிக்கச் சென்றபோது சீடனைப் பார்த்து, ``உன் பணிவிடையால் எனக்கு மிக்க சந்தோஷம். இன்று பூஜைக்குப் பின் என்னுடைய 'பாரஸ மணி' இரத்தினக் கல்லை உனக்கு அளிப்பேன்'' என்று சொல்லி வெளிக் கிளம்பினார்.
சீடன் சிந்தித்தான்- 'அந்த இரத்தினக் கல் இந்தக் குடிசையில்தான்.
இருக்க வேண்டும். முனிவர் பொய் சொல்லியிருக்கமாட்டார். எனவே அவர் திரும்புவதற்குள் எப்படியாவது அதை எடுத்துவிட வேண்டும்' என்று நினைத்து, எல்லா இடத்திலும் தேடினான். மண்ணைத் தோண்டியும் பார்த்தான்; இரத்தினம் கிடைக்கவில்லை.
முனிவர் திரும்பி வந்ததும் குடிசையின் அலங்கோலத்தைக் கண்டார். ``என்ன தேடினாய்?'' என்று கேட்டார்.
''உங்களுடைய இரத்தினக் கல்லைத் தேடித் தளர்ந்தேன்'' என்றான் சீடன்.
`'என்னிடம் கேட்பதற்கென்ன? அதோ, அந்தப் பழைய டப்பாவில் இருக்கிறதே! எடு அதை'' என்றார் முனிவர்.
சீடனுக்கு ஒரே ஆச்சரியம். 'இவ்வளவு விலை உயர்ந்த மாணிக்கம் இந்தப் பழைய டப்பாவிலா இருக்கிறது? இரும்பைப் பொன்னாக்கும் இந்த மாணிக்கம் இத்தனை நாட்களாக இதே டப்பாவில் அடைந்திருந்தும் இந்தத் தகர டப்பா பொன்னாக மாறாதது ஏனோ? ஒருகால் முனிவர் இயற்கை மணியல்லாது ஏதாவது போலிக் கல் வைத்திருப்பாரோ?' என்று எண்ணியவாறு டப்பாவை எடுத்துக் கொடுத்தான் சீடன்.
முனிவர் அதைத் திறந்தார். உள்ளேயிருந்து ஒரு சிறிய கந்தைத் துணி முடிச்சை எடுத்து அதை அவிழ்த்தார். மிகப் பிரகாசமான ஒரு ரத்தினம் அதில் இருந்தது. அப்படியும் சீடனின் சந்தேகம் தீரவில்லை.
அவன் முனிவரிடம் கேட்டான்: ''ஐயா, உண்மையான 'பாரஸமணி' என்றால் இந்தப் பழைய இரும்பு டப்பா பொன்னாகாதது ஏன்?'' முனிவர், ``இதோ பார்த்தாயா? இந்தக் கந்தல் துணி, மணியைச் சுற்றி இருப்பதனால் மணிக்கும் டப்பாவுக்கும் தொடர்பு அற்றுப் போய்விட்டது. எனவே, அது பொன்னாகவில்லை'' என்றார்.
``ஈசனும் ஜீவனும் ஒரே உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் ஜீவனைச் சுற்றி ஆசை என்ற கந்தல் சுற்றியிருப்பதனால் ஈசனுடைய தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஜீவனே இந்த டப்பா; ஈசனே இந்த மணி. நான் எனது என்ற எண்ணங்களே இந்தக் கந்தல் துணி ஆசையை அகற்றி ஈசனை அடைய வேண்டும்'' என்று விளக்கினார் முனிவர்.
சீடனுக்கு நல்ஞானம் ஏற்பட்டது.