முன்னொரு காலத்தில் ரத்னாகரன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் சகவாச தோஷத்தினால் திருடன் ஆகிவிட்டான்.
காட்டில் அவன் ஒற்றையடிப் பாதையில் ஒளிந்து கொண்டு நிற்பான். அந்த வழியாக யாராவது யாத்திரிகர் வந்தால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொல்வான். பிறகு அவர்களிடமுள்ள பொருள்களைக் களவாடி அவர்களின் உடலை அப்பால் தூக்கி எறிவான்.
ஒருதடவை தேவரிஷி நாரதர் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ரத்னாகரன் அவர் மீது பாய்ந்து தன் கையிலிருந்த கத்தியை உருவினான்.
``நீ எதற்காக அப்பா என்னைக் கொல்ல வருகிறாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?'' என்றார் நாரதர்.
``நீங்கள் எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் உங்களைக் கொன்று உங்கள் உடைமைகளை எடுத்துக் கொள்வேன்!''
``மனிதர்களைக் கொல்லாமல் காய் கிழங்குகளை உண்டு நீ வாழ்க்கை நடத்த முடியாதா?''
``நான் காய் கிழங்குகளைச் சாப்பிடலாம். ஆனால் என் பெற்றோர், என் மனைவி, என் குழந்தைகள் இவர்களால் காய் கிழங்குகளைச் சாப்பிட முடியுமா?''
``அப்பா, நீ யாருக்காக இப்படி மனிதர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்கிறாயோ, அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ளப் போகிறார்களா? உன் பாவத்தை நீ தான் அனுபவிக்க வேண்டும்; தெரிந்ததா?'' என்றார் நாரதர்.
``இது எப்படி நியாயம் ஆகும்? என் பாவத்தினால் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு யார் வாழ்க்கை நடத்துகிறார்களோ அவர்கள் என் பாவத்தில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?''
``அப்படி இல்லை அப்பா! உன் பாவத்தில் யாரும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். உனக்குச் சந்தேகமாக இருந்தால் நான் இங்கேயே நிற்கிறேன். நீ வீட்டிற்குப் போய்க் கேட்டுவிட்டு வா.''
``ஐயா, பெரியவரே! என்னை என்ன மடையன் என்று நினைத்துக் கொண்டீர்களா? என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, நீ்ங்கள் ஓடிப் போய்விடலாம் என்று பார்த்தீர்களா?''
``நான் எங்கும் ஓடிப் போகமாட்டேன். ஆனால், உனக்கு இந்தச் சந்தேகமே வேண்டாம். நீ என்னை இந்த மரத்தோடு கட்டிப் போட்டுவிட்டு உன் வீட்டிற்குச் செல்'' என்று சொல்லிவிட்டு நாரதர் மரத்தின் அருகில் போய் மரத்தோடு மரமாக நின்றார்.
ரத்னாகரன் அவரைக் காட்டுக் கொடியினால் மரத்தோடு கட்டினான். கட்டிவிட்டு நேரே வீட்டை நோக்கி ஓடினான்.
``அப்பா, நான் தினம் பாவமான கொலைத் தொழில் புரிந்துதான் உங்களையெல்லாம் காப்பாற்றி வருகிறேன். அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டா, இல்லையா?'' என்று கேட்டான்.
தகப்பனார் சற்று நேரம் யோசித்தார். பிறகு சொன்னார் - ``பிள்ளாய்! நாங்கள் உன்னை வளர்த்துப் பெரியவனாக்கினோம். இப்பொழுது எங்களுக்கு மூப்பு வந்துவிட்டது. நாங்கள் உன்னைக் காப்பாற்றியது போல, இப்பொழுது எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்கு வேண்டிய பணத்தை நீ எப்படிச் சம்பாதிக்கிறாய் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆகவே, உன் பாவத்திலோ புண்ணியத்திலோ எங்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது.''
ரத்னாகரன் இந்தப் பதிலைக் கேட்டுச் சற்று அயர்ந்தான். பிறகு தாயாரிடம் இதே கேள்வியைக் கேட்டான். தகப்பனார் சொன்ன பதிலைத்தான் அவளும் சொன்னாள்.
ரத்னாகரன் இதே கேள்வியை மனைவியிடம் கேட்டான். அவள் சொன்னாள்- ``மனைவியைக் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற நீங்கள் எப்படிப் பொருள் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆகவே உங்கள் பாவத்தில் எனக்கு எப்படிப் பங்கு ஏற்படும்?''
கடைசியில் தன் மகனையும் இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு மகன் சொன்னான்- ``அப்பா, நான் இப்பொழுது சிறுவன். தாங்கள் என்னைக் காப்பாற்றி வருகிறீர்கள். நாளைக்கு நான் பெரியவனானதும் நான் உங்களைக் காப்பாற்ற ஆரம்பிப்பேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆகவே உங்கள் பாவத்தில் என்னால் எப்படிப் பங்கேற்றுக் கொள்ள முடியும்?''
இவர்கள சொன்ன பதில்களைக் கேட்ட பிறகுதான் ரத்னாகரனுக்கு ஞானோதயம் பிறந்தது.
நாரதரைக் கட்டிப் போட்டிருந்த இடத்திற்கு ஓடினான். அவரை விடுவித்து அவர் காலில் விழுந்து கதறி அழுதான்.
``என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் இதுவரையில் எத்தனையோ பாவகாரியங்களைச் செய்திருக்கிறேன். இருந்தும் அவர்களில் ஒருவராவது என் பாவத்தில் பங்கு கொள்ளமாட்டேன் என்கிறார்களே! சுவாமி, நீங்கள்தான் என் பாவங்களுக்கு ஒரு பிராயச்சித்தம் சொல்ல வேண்டும்'' என்று கேட்டான்.
``நல்லோரைக் காண்பதுவும் நன்றே'' என்று சொல்வார்கள். அது ரத்னாகரன் விஷயத்தில் மிகவும் உண்மையாகிவிட்டது. இத்தனை நாளும் தான் செய்தது தவறு என்று உணர ஆரம்பித்துவிட்டான்.
நாரதர் அவனுக்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லிக் கொடுத்தார். ராமநாமம் ஜபிக்கச் சொன்னார். ஆனால் அவனால் `ராம' என்ற நாமத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. எனவே நாரதர் தான் கட்டப்பட்டிருந்த மரத்தின் பெயரான மராவை `மரா' என்று ஜபிக்கும் படிச் சொன்னார்.
அவ்வளவுதான், ரத்னாகரன் அங்கேயே உட்கார்ந்து 'மரா, மரா' என்று ஜபம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது 'ராம, ராம' என்று மாறிற்று.
வருஷங்கள் சென்றன. ஆனால் ரத்னாகரன் அங்கேயே உட்கார்நது தன்னை மறந்து ராமஜபம் செய்துகொண்டேயிருந்தான். அவனைச் சுற்றிப் புற்று உண்டாகிவிட்டது. அவர் தவத்தை மெச்சிப் பிரம்மா, ஒரு நாள் அவர் முன் தோன்றி, அவரை வெளியே வரும்படி அழைத்தார். வெளியே வந்தவா் பழைய ரத்னாகரன் அல்ல; புதிய வால்மீகி!
வடமொழியில் புற்றை வல்மீகம் என்று அழைப்பார்கள். ஆகவே வல்மீகத்திலிருந்து வெளிப்பட்ட அவர் வால்மீகி எனறு அழைக்கப்பட ஆரம்பித்தார்.
அந்த வால்மீகிதான் ஆதி கவியாகி, அழியாப் புகழ் பெற்ற ராமாயணக் காவியத்தை இயற்றினார்.