இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் முன்னொரு சமயம் அயோத்தியில் அரசு புரிந்து கொண்டிருந்தார். அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடிப்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவர். தாம் ஏகாதசி விரதம் இருப்பது மட்டுமின்றித் தமது நாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகள், கிழவர்கள் இவர்களைத் தவிர மற்ற எல்லாரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்; இல்லையேல் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டம் போட்டிருந்தார்.
இதனால் எல்லோருமே ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க, எல்லாருமே சொர்க்கத்தை அடைந்தார்களே தவிர, யாருமே யமபுரிக்குச் செல்லவில்லை.
இதைக் கண்டு யமன் தவித்தான். உடனே பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டான். உடனே பிரம்மதேவர், மோகினி என்ற ஒர் அழகிய ஸ்திரியைச் சிருஷ்டித்து அவளை ஹிமாலயப் பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதே இடத்திற்கு ருக்மாங்கதனும் வந்து சேர்ந்தார். அவர் அரசைத் தன் மகன் தர்மாங்கதனிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் செய்வதற்காக மனைவியுடன் இதே இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
மோகினியைக் கண்டதும், ருக்மாங்கதன் அவளுடைய மோகவலையில் சிக்கினார். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
மோகினி சொன்னாள் - ''தாங்கள் மீண்டும் ராஜதானி திரும்புங்கள். அங்கே நான் தங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை - நான் என்ன கேட்டாலும் அதன்படி தாங்கள் நடந்துகொள்ள வேண்டும்'' என்றாள்.
ருக்மாங்கதன் அதற்கு இசைந்து, ராஜதானி திரும்பி, மோகினியை மணம்செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தார். ஆனால் அவர் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதை மட்டும் விடவில்லை.
ஒரு நாள் மோகினி அரசனைப் பார்த்து, ''நான் என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னீர்களே, தருகிறீர்களா?'' என்று கேட்டாள்.
''அப்படித் தருவதாக நான்தான் உனக்கு முன்னமே வாக்குக் கொடுத்திருக்கிறேனே'' என்றார் அரசர்.
''அப்படியானால் இந்த ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதை விட்டுவிட வேண்டும்'' என்றாள் மோகினி.
அதைக் கேட்டு அரசர் திகைத்தார். ``ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதில் நான் எவ்வளவு சிரத்தையாக இருக்கிறேன் என்பதை நீ அறிவாய். ஆகவே இதைத் தவிர வேறு ஏதாவது கேள்'' என்றார்.
``அப்படியானால் தங்கள் மகன் தலையை எனக்குக் கொடுங்கள்'' என்றாள்.
அதைக் கேட்டு மன்னர் வருந்தினார். ஆனால் மகனோ, ``அப்பா! என்றோ போகக் கூடிய உயிர், இந்த நல்ல காரியத்திற்காகத்தான் போகட்டுமே. ஆகவே என் தலையை வெட்டுங்கள்'' என்றான்.
ருக்மாங்கதன் தன் மகனின் தலையை வெட்டப் போனதுதான் தாமதம். ஆகாயத்திலிருந்து தெய்வ விமானம் கீழே இறங்கியது.
அதில் இருந்த பகவான் ருக்மாங்கதனையும் அவன் குடும்பத்தினரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு தேவலோகம் அடைந்தார்.