கடுமையான கோடைக்காலம். சிறந்த அறிஞரான ஆனால் பரம ஏழையான ஷேக்ஸாதி என்ற குரு, கந்தலைச் சுற்றிக்கொண்டு மரநிழலில் அமர்ந்து சத்து மாவைப் புசித்துக் கொண்டிருந்தார்.
சிறிது தூரத்தில் பல்லக்கில் அமர்ந்தவாறு, ஆடம்பர தோரணையுடன் அரசனுடைய ஆஸ்தான வித்வான் பகல் உணவிற்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
ஷேக்ஸாதியைப் பார்த்ததும் வேலைக்காரனிடம், ''மரத்தின் அடியில் யார் அமர்ந்திருக்கிறார்?'' என்று கேட்டார் ஆஸ்தான வித்வான்.
''ஐயா, அவர் சாதாரண மனிதர். கிராமத்து மக்களிடம் பேசிக்கொண்டு தமது காலத்தைக் கழிக்கிறார்'' என்றான் வேலையாள்.
''பல்லக்கை அவர் அருகே எடுத்துச் செல்லுங்கள்'' என்று அரசு வித்வான் ஆணையிட்டார். பல்லக்கிலிருந்து வெளியே வந்து, அந்த அறிஞரை அடையாளம் கண்டுகொண்டார், கேட்டார்: “இந்தக் கொடிய வெயிலில் என்ன செய்கிறீர்கள்?''
''சத்துமாவைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்'' என்று பதில் வந்தது.
அரசு வித்வான் நீண்ட பெருமூச்சு விட்டார்.
“அரசரை எப்படி மகிழ்விப்பது என்பதை மட்டும் நீ தெரிந்து கொண்டிருந்தால் மீதியிருக்கும் வாழ்நாளை இப்படிச் சத்துமாவை உண்டு கழிக்க வேண்டியிருக்காதே?' - இது ஆஸ்தான வித்வான்.
குரு உடனே பதில் அளித்தார்: ''சத்துமாவைச் சாப்பிடுவது எப்படி என்று உனக்குத் தெரிந்திருந்தால், மீதி வாழ்நாளை அரசனை அண்டி அவனை மகிழ்வித்துக் காலம் கழிக்க வேண்டியிருக்காதே?''