ஒரு பணக்காரன் ஏழை ஒருவனைச் சந்தித்தான்.
பணக்காரன், "என்னிடம் நூறு கிராம் தங்கம் இருக்கிறது. அதில் இருபது கிராம் உனக்குத் தருகிறேன். நீ என்னைப் புகழ்ந்து பேசுவாயா?” என்று ஏழையிடம் ஆவலோடு கேட்டான்.
அதற்கு ஏழை, "நீ உனது தங்கத்தை நியாயமாகப் பங்கிடாத போது நான் எப்படி உன்னைப் புகழ்வது?” என்று வினவினான்.
"சரி.... நான் என்னிடம் இருப்பதில் பாதித் தங்கத்தை உனக்குக் கொடுக்கிறேன். அப்போதாவது என்னைப் புகழ்வாயா?" என்றான் பணக்காரன்.
"நாம் இருவரும் சமமாகிவிடுவோமே! அதனால் நான் உன்னைப் புகழ மாட்டேன்' என்று அந்த ஏழை பதில் சொன்னான்,
"அப்படியானால் எல்லாத் தங்கத்தையும் உனக்கே கொடுத்துவிடுகிறேன். அதற்குப் பிறகாவது என்னைப் புகழ்வாயா?" எனக் கேட்டான் பணக்காரன்.
அதற்கு அந்த ஏழை சிரித்துக் கொண்டே, "எல்லாத் தங்கமும் என்னிடம் இருந்தால் நான் உன்னைப் புகழ வேண்டிய அவசியமே இல்லையே!” என்று பதில் கூறினான்.
பாவம், அந்தப் பணக்காரனின் முகத்தில் அசடு வழிந்தது!