ஒரு மன்னர் நகர்வலம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிரில் பிச்சைக்காரன் ஒருவன் வந்து, "பிச்சை போடுங்கள்' என்றான்.
மன்னர், “என் அமைதியைக் கெடுக்காதே..... போ!" என்றார்.
அவன் சிரித்தான்: "அரசே! உங்கள் அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால் அதற்குப் பெயர் அமைதியே கிடையாது!" என்றான்.
அப்போதுதான் மன்னர், 'எதிரில் நிற்பது வெறும் பிச்சைக்காரன் இல்லை..... யோகி!' என்பதைப் புரிந்துகொண்டார்.
அது புரிந்ததும் மன்னர், "துறவியே! உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்.... கொடுக்கிறேன்!” என்றார்.
அந்தத் துறவி மறுபடியும் சிரித்தார்.
“அரசே! உங்களால் முடியாததை எல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம்: செய்யாதீர்கள்!” என்றார்.
அதைக் கேட்டதும் மன்னருக்குக் கோபம் வந்து விட்டது. 'இவர் என்ன இப்படி சொல்கிறார்!' என்று நினைத்தார்.
அதனால் அவர் நகர்வலத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு துறவியிடம், “என்னுடன் அரண்மனைக்கு வாருங்கள்!” என்றார்.
துறவியை அழைத்துக்கொண்டு மன்னர் அரண்மனைக்கு வந்தார்.
துறவி தன்னிடமிருந்த பிச்சைப் பாத்திரத்தை நீட்டினார். “இது நிறைய எனக்குப் பொற்காசுகள் வேண்டும்!” என்றார்.
"பூ! இவ்வளவுதானா?” என்று சொல்லிக் கொண்டே கையைத் தட்டினார் மன்னர்.
ஒரு பெரிய தாம்பாளம் நிறைய பொற்காசுகளை வீரன் ஒருவன் அரசரிடம் கொண்டு வந்தான்.
அரசர் பொற்காசுகளை அள்ளிப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். பொற்காசுகளைப் போடப் போட, அந்தப் பிச்சைப் பாத்திரம்அத்தனையையும் உள்ளே வாங்கிக்கு கொண்டே இருந்துதது.
மீண்டும் மீண்டும் வீரர்கள் தாம்பாளங்களில் பொற்காசுகளை அரசரிடம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
இப்படி அரசாங்க கஜானாவே காலியாகிவிட்டது.
மூட்டை மூட்டையாகப் பொற்காசுகளைக் கொட்டியாயிற்று. அவற்றையெல்லாம் அந்தப் பிச்சைப்பாத்திரம்முழுங்கிக் கொண்டே இருந்தது. கடைசி வரையில் அந்தப் பாத்திரம் நிரம்பவே இல்லை.
அதனால் இப்போது அரசரிடம் இருந்த கர்வம் போய்விட்டது. அவர் அப்படியே 'பொத்' தென்று துறவியின் காலில் விழுந்தார்.
அப்போது அந்தத் துறவி, “மன்னா! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல... வேறு யாராலேயும் நிரப்ப முடியாது. அதற்கு என்ன காரணமென்றால்.... இது சாதாரணப் பிச்சைப் பாத்திரம் அல்ல... பேராசைகளுடன் வாழ்ந்து செத்துப் போன ஒரு மனிதனின் மண்டையோடு இது!” என்றார்.