காசி மாநகரத்தில் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர்பலகலைகளும் கற்றுத் தேர்ந்தவர்.
அந்தப் பண்டிதரின் முன்னோர்களுக்குத் திவசம் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.
அவர் தன் சீடர்களை அழைத்து தன் வீட்டில் வளர்ந்து வரும் ஒரு வெள்ளாட்டை ஆற்றில் நன்கு குளிப்பாட்டி, கழுத்தில் மாலை போட்டு, மஞ்சள், சந்தனம் தெளித்த துணியை அணிவித்துக் கொண்டு வரும்படிக் கூறினார்.
சீடர்களும், பண்டிதர் கூறியபடி ஆட்டை நன்கு குளிப்பாட்டினார்கள். அதற்கு மங்கலப் பொருள்களையும் மாலைகளையும் அணிவித்து அழைத்து வந்தனர்.
அப்போது ஆட்டுக்குத் தன் முற்பிறவியின் நினைவு வந்தது. 'இன்றுடன் எனது பாவங்கள் யாவும் நீங்கி விடும்; இனி இந்த உலகிலிருந்து நான் விடுதலை பெற்று விடலாம்!' என்ற உண்மை அதற்குத் தெரிய வந்தது.
உடனே அந்த ஆடு சிரிக்கத் தொடங்கியது; பிறகுசிறிது நேரத்தில் தானாகவே அழவும் செய்தது.
ஆடு சிரிப்பதையும் பிறகு அழுவதையும் கண்ட பண்டிதரும், அவரது சீடர்களும் வியப்படைந்தனர்.
பண்டிதர் ஆட்டை நெருங்கி, "வெள்ளாடே! நீ பேசுவாயா? நீ ஏன் முதலில் சிரித்தாய்? பிறகு ஏன் அழுதாய்? என்று கேட்டார்.
"ஐயா! எனக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு முற்பிறவிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் சக்தி கிடைத்தது. அதனால்தான் முதலில் சிரித்தேன்; பின்னர் அழுதேன். என் முழுக் கதையும் தெரிந்தால்தான் அதன் பொருள் உங்களுக்குப் புரியும்" என்று ஆடு கூறியது.
ஆடு பேசுவதைக் கேட்டதும் பண்டிதருக்கு வியப்பு ஏற்பட்டது.
அவர் ஆட்டின் முற்பிறவிக் கதையை அறிய விரும்பினார். "ஆடே! உன் கதையைச் சொல்!" என்றார்.
ஆடு தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது:
"நான் என் முற்பிறவிகளில் ஒன்றில் மனிதனாக இருந்தபோது உங்களைப் போலவே சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த ஒரு பண்டிதனாக இருந்தேன். அப்போது நானும் என் முன்னோர்களின் திதிக்காக ஒரு வெள்ளாட்டை வெட்டிக் கொன்றேன். அந்த ஒரு பாவத்திற்காக நான் 500 முறை ஆடாகப் பிறந்தேன். ஒவ்வொரு முறையும் என் தலை வெட்டப்பட்டது. இந்தப் பிறவி என்னுடைய 500-ஆவது பிறவியாகும். இப்போது என் தலை வெட்டப்பட்டதும் என் பாவங்கள் முழுவதும் என்னை விட்டு நீங்கிவிடும். அதனால் நான் மோட்சம் அடைவேன். இதை நினைத்துப் பார்த்ததும், என் பிறவித் துன்பம் முடிந்து மேலுலகம் அடைவதை நினைத்து முதலில் சிரித்தேன்” என்றது ஆடு.
அதைக் கேட்டதும் பண்டிதர், “அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே! அது சரி; பிறகு நீ ஏன்அழுதாய்? அதைச் சொல்” என்று வினவினார்.
"ஐயா! இப்போது என்னைக் கொல்லப் போகும் உங்கள் நிலையை நினைத்துப் பார்த்தேன், என்னைப் போலவே தங்கள் தலையும் 500 முறை வெட்டப்பட இருப்பதை எண்ணினேன். உங்கள் மீது ஏற்பட்ட பரிதாபத்தினாலேயே எனக்கு அழுகை வந்தது" என்றது வெள்ளாடு.
இதைக் கேட்டதும் பண்டிதர் மனம் வருந்தினார்.
தன் அறியாமையை நினைத்துத் தலை குனிந்தார். தான் பல சாஸ்திர நூல்களைப் பயின்றும் 'உயிர்வதை தவறு' என்பதை இது வரையில் உணராமல் இருந்ததை நினைத்து மனம் கலங்கினார்.
"வெள்ளாடே! என் அறியாமையால் தவறு செய்ய இருந்தேன். நீ என்னைத் திருத்தி விட்டாய். இனி நான் உன்னைக் கொல்ல மாட்டேன். என்னைப் பாவத்திலிருந்து நீ காப்பாற்றியதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். இப்போது உன் விருப்பம் போல் நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்று பண்டிதர் கூறினார்.
அவர் ஆட்டின் கட்டையும் அவிழ்த்து விட்டார்.
ஆனால் வெள்ளாடு வெளியேச் செல்லவில்லை.
அது, "ஐயா! தாங்கள் மனம் திருந்தியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இன்றுடன் என் உயிர் போக வேண்டும் என்பது விதி. விதி வலிமை மிக்கது என்பது தாங்கள் அறியாததா?" எனக் கேட்டது வெள்ளாடு.
பண்டிதர் எப்படியும் ஆட்டைக் காப்பாற்ற முடிவு செய்தார்.
ஆதலால் அவர், தன் சீடர்களை அழைத்து, "இன்று இந்த ஆடு செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்லுங்கள். அதன் உயிருக்கு எவராலும் அபத்து நேராமல் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்" என்றார்.
அதைக் கேட்ட ஆடு, "பண்டிதரே! நீங்கள் எனக்கு அளிக்கும் பாதுகாப்பு மிகவும் பலவீனமானது. என் பாவச் செயலின் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது. எனவே விதிப்படி இன்று என் முடிவு என்பது தடுக்க முடியாதது; இருந்தாலும் தங்களின் விருப்பப்படி தங்கள் சீடர்கள் என்னுடன் வரட்டும்" என்றது.
அதன்பிறகு ஆடு அருகிலிருந்த ஒரு குன்றை நோக்கிச் சென்றது. அங்கிருந்தபசுந்தழைகளைத் தின்றபடியே அது மலை உச்சியை நோக்கிச் சென்றது.
சீடர்களும் ஆட்டைத் தொடர்ந்து சென்றார்கள்.
மலை உச்சியை அடைந்த வெள்ளாடு, அங்கிருந்தஒரு பாறையின் மீது ஏறி ஒரு மரக்கிளையை எட்டிப் பிடித்து இளம் தளிர்களைத் தின்ன விரும்பியது.
அப்போது திடீரென்று வானத்தில் ஒரு பேரிடி தோன்றியது. அது நேரே ஆட்டின் கழுத்தில் வந்து விழுந்தது. உடனே ஆட்டின் தலை சுக்கல் நூறாகச் சிதறியது.
அருகில் இருந்த சீடர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. இதைக் கண் எதிரில் கண்ட சீடர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றார்கள்.
அப்போது அங்கு போதிசத்துவர் ஒரு தெய்வீக மரமாக அவதாரம் எடுத்திருந்தார். அவர் தம் சக்தியின் வலிமையால் நடந்தது அனைத்தையும் அறிந்து கொண்டார். அவர்தம் சக்தியால் பத்மாசனம் போட்டு அமர்ந்தார்.
அதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் பெருகியது. அப்போது போதிசத்துவர் மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கினார்:
"இந்த உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால், உயிர் உள்ளவை எல்லாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்வதை நிறுத்திவிடும். கொலை செய்பவரின் விதி மிகவும் கொடூரமானது. பிறப்புக்கு எது காரணமோ அதுவே இறப்புக்கும் காரணமாகும். தன்னைப் போலவே இன்பமுள்ள உயிர்களை எவன் தன் சுகம் கருதி துன்புறுத்துகிறானோ அவனுக்கு மறுமையில் இன்பம் கிடைப்பதில்லை"