ஒரு குரங்கு சிவலிங்கத்தின் மீது வில்வதளங்களைப் பறித்துப் போட்டுத் தினமும் அர்ச்சனை செய்து வந்தது.
சிவபெருமான் அதன் முன் தோன்றி, “நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார்.
அதற்குக் குரங்கு, 'நான் ஏன் இப்படிச் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. அந்தச் சக்தியையும் புத்தியையும் தாங்கள்தான் எனக்கு அளித்தீர்கள். ஒரு வேளை நான் முற்பிறவியில் சிவனடியாராக இருந்திருப்பேன்'' என்று பதில் கூறியது.
குரங்கின் பக்தியைக் கண்டு இறைவன், 'சரி, அடுத்தப் பிறவியில் நீ ஓர் அரசனாகப் பிறப்பாய்'' என்று வரம் கொடுத்தார்.
அப்போது குரங்கு ஒரு வேண்டுகோளைச் சிவபெருமானிடம் தெரிவித்தது:
''இறைவா, எனக்கு அரசப் பதவியில் விருப்பமில்லை. அப்படியே நான் ஒரு வேளை அரசனாகப் பிறந்தாலும், எனது முகம் மட்டும் மாறாமல் குரங்கு முகமாகவே இருக்க அருள் புரியும்படி பிரார்த்திக்கிறேன். அப்போதுதான் நான் அரசனாக இருக்கும் நிலையில், என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது, 'எனக்குக் கிடைத்த அரசபதவி இறைவன் அருளால் கிடைத்தது; இதைக் கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்' என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்கும்.''
குரங்கு கேட்டுக் கொண்டபடியே சிவபெருமான் அருள் புரிந்தார்.
அந்தக் குரங்கு அடுத்தப் பிறவியில் திருவாரூரில் சோழ மன்னன் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
இந்த வரலாறு திருவாரூர் தல புராணத்தில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.