மானசரோவரில் வசித்து வந்த அன்னம் ஏதோ காரணத்திற்காக ஒரு சமயம் ஓர் ஏரியின் வழியாகச் சென்றது. அதை ஒரு கொக்கு சந்தித்தது.
அன்னத்திடம் கொக்கு, “அழகிய கண்களையும் சிவப்பு நிறக் கால்களையும் கொண்ட நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று வினவியது.
அதற்கு அன்னம், “நான் அன்னம். மானசரோவிலிருந்து வருகிறேன்" என்று கூறியது.
"மானசரோவரா? அது எப்படி இருக்கும்?" என்று கேட்டது கொக்கு.
"மானசரோவர் என்பது எப்போதும் தெளிந்த நீருடன் பொற்றாமரைகள் நிறைந்து காணப்படும்" என்று அதன் பெருமையை அன்னம் விளக்கமாகக் கூறியது.
அதைக் கேட்ட கொக்கு, "அங்கு தவளைகள் உண்டா?" என்று விசாரித்தது.
“இல்லை” என்று பதில் கூறியது அன்னம்.
"நீ என்னமோ மானசரோவரைப் பற்றி மிகவும் பெருமையாகக் கூறுகிறாயே! குறைந்தபட்சம் தவளை கூட இல்லாத மானசரோவரை நான் உயர்ந்ததாக நினைக்கவில்லை” என்று கொக்கு இகழ்ந்து கூறியது.
அதுபோல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தரவல்ல சிறந்த நூல்களில் தாம் விரும்பும் கீழ்த்தரமான கருத்துக்கள் இல்லாததால் அவற்றைப் புல்லறிவாளர்கள் இகழ்ந்து பேசுவார்கள்.