ஒரு துறவி ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர், தூய்மையானவர்.
அவருக்கு ஏராளமான சீடர்கள். அவரவர் முடிந்தவரை நியமங்களைக் கடைப்பிடித்து தர்மநெறிப்படி வாழ்ந்தார்கள்.
அவர்களில் ஒரு சீடன் நிறைய நேரம் பூஜை செய்வான். மற்ற சீடர்கள் காலை ஆறு மணிக்கு எழுவார்கள். இவனோ விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிடுவான்.
இப்படித்தான் ஒரு நாள் நடுங்கும் குளிரில் நான்கு மணிக்கு எழுந்து வெற்றுடம்புடன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான்.
அப்போது துறவி அந்தப் பக்கமாக வந்தார். சீடனைப் பார்த்தபடி நின்றார்.
சீடனுக்குக் கர்வம் ஏற்பட்டது. துறவியிடம் சென்றான்:
“குருதேவரே! இவர்களெல்லாம் தூங்கும் போது நான் ஒருவன்தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன். இவர்களுக்கெல்லாம் என்றைக்குத்தான் பிரார்த்தனையின் மகத்துவம் புரியப் போகிறதோ! தெரியவில்லை?" என்றான்.
துறவி புன்சிரிப்புடன், "தம்பி! உன் ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்களை நிந்திப்பதற்காக சீக்கிரம் கண் விழிப்பது அடியோடு நல்லதல்ல. இப்படிப் பிரார்த்தனை செய்வதற்குப் பதில் நீ இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்காமல் இருப்பது நல்லது" என்று சொன்னார்.
சீடனின் கர்வம் கரையத் தொடங்கியது.