நாரதர் பூலோகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு மண்டை ஓடு தென்பட்டது. அதை அவர் எடுத்து அதன்மேல் எழுதியிருந்ததைப் படித்தார்:
''பிறந்தது முதல் வறுமை வாட்டும். சில ஆண்டுகள் சிறைவாசம். கடைசியில் கடற்கரையில் கோர மரணம். அதன் பிறகுதான் இவனுக்கு யோகம்."
நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை, 'இறந்த பிறகு. ஒருவனுக்கு என்ன யோகம் வேண்டி இருக்கிறது? பிரம்மா தவறுதலாக அப்படி எழுதிவிட்டார் போல் இருக்கிறது' என்று நினைத்துக்கொண்டு நேராக அவர் பிரம்மாவின் எதிரில் போய் நின்றார்.
''இந்த மண்டை ஓட்டை முதலில் உமது கையில் பிடியுங்கள்'' என்றார் பிரம்மாவிடம் நாரதர்.
பிரம்மா அந்த ஓட்டை தனது கைகளில் வாங்கிக் கொண்டார்.
"அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று படியுங்கள்'’ என்றார் நாரதர்.
'’அதில் என்ன எழுதியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும், அதில் என்ன உங்களுக்கு சந்தேகம்" என்று பிரம்மா கேட்கவே, நாரதருக்கு கோபம் வந்துவிட்டது.
''கடலில் கோர மரணம் அடைந்த பின்னர், அவனுக்கு யோகம் என்று எழுதியிருக்கிறீர்களே, அந்த யோகத்தினால் அவனுக்கு என்ன சுகம் கிடைக்கப் போகிறது?" என்று வினவினார் நாரதர்.
உடனே பிரம்மா விளக்கினார்:
"அதுதான் இதிலுள்ள விசேஷம். மண்டை ஓட்டை வேறு யாரும் இங்கு எடுத்துவர முடியாது. அப்படி வந்தாலும் நான் அதை என் கையால் வாங்க மாட்டேன். நான் எழுதிய மண்டை ஓடு எனக்கே திரும்பி வந்து என் கைகளில் நான் அதை வாங்கிவிட்டதால், அது இனி மண்டை ஓடு அல்ல. 'பிரம்ம கபாலம்' ஆகிவிட்டது. வாழ்நாள் பூராவும் கஷ்டப்பட்ட ஜன்மத்துக்கு இனி பிறவி எடுத்து அது துன்பப்படக் கூடாது என்று ஒரு யோகம் கிடைக்கக் கூடாதா......? அந்த மனிதனுக்கு இனி பிறவியே கிடை யாது. இதைவிட ஒரு மனிதனுக்கு இறந்தபின் வேறு என்ன 'யோகம்' வேண்டும்...?'
பிரம்மாவின் விளக்கத்தைக் கேட்டு சிந்தித்தபடியே நடந்தார் நாரதர்.