ஒரு கருமி வணிகம் செய்து அதிகமாகப் பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு எதுவும் உதவி செய்யாமல் வாழ்ந்து வந்தான்.
அப்போது அவனுக்கு கடவுளைப் பற்றி நினைக்க நேரமில்லை.
சிறிது காலம் கழித்து அவனுக்கு வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கையில் உள்ள செல்வமெல்லாம் போய்விட்டது.
அதனால் கஷ்டப்படும் நிலையில் அவனுக்குக் கடவுளைப் பற்றி நினைவு வந்தது.
உடனே கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினான்.
அவனுக்கே அதிர்ச்சி அளிக்கும் நிலையில் கடவுள் அவன் முன் தோன்றினார். உடனே அவன் செய்த பாவங்கள் மறைந்துவிட்டன. அதை உணர்ந்த கருமி சாமர்த்தியமாகக் கடவுளிடம் கூறினான்:
'இறைவா! என்னிடம் செல்வம் இருக்கும்போது உனக்கோ அல்லது உனது அடியார்களுக்கோ, ஏழைகளுக்கோ எதுவும் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். என்னிடம் இருந்த பணம் எல்லாம் என்னைவிட்டுச் சென்றபோதுதான் எனக்கு உன்னைப்பற்றிய நினைவு வந்தது. என்னிடம் தற்போது ஒன்றும் இல்லையாதலால் என் பாவ மூட்டைகளையாவது உன்னிடம் அர்ப்பணித்துப் போக வந்தேன். உன்னைக் கண்டவுடன் அதுவும் மறைந்துவிட்டதே! இனி நான் எதை அர்ப்பணிக்க முடியும்?"
கடவுள் கூறினார்:
"உன்னுடைய குணம் எனக்குத் தெரியும். சிறந்த வணிகராகிய நீ பணம் இல்லாத போது எங்கே பாவ மூட்டைகளையும் வணிகம் செய்து யார் தலையிலாவது கட்டி விடப் போகிறாயோ என்றுதான் அவற்றைப் போக்க என்னிடம் அழைத்துத் தரிசனம் கொடுத்தேன்.