மாலை நேரம். வணிகன் ஒருவன் தான் வைத்திருக்கும் கடைக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு அடுத்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான்.
இருட்டிவிட்டது. இடையிலே காடு.
’எப்படிச் செல்வது?’ என்று தவித்தான்.
அப்போது வழிப்போக்கன் ஒருவன் துணைக்கு வந்து சேர்ந்தான்.
இருவரும் சிறிது தூரம் நடந்தார்கள். நேரம் அதிகமாயிற்று.
எனவே, செடி மறைவில் வணிகனும், நடந்து செல்லும் வழியில் வந்த வழிப்போக்கனும் படுத்துக் கொண்டனர்.
நடுநிசி. அங்கு சில திருடர்கள் தாங்கள் களவாடிய பொருட்களைப் பங்கு போட்ட பிறகு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர்.
வழியிலே படுத்திருந்த வழிப்போக்கனை ஒரு திருடன் எட்டி உதைத்து விட்டு, ‘‘கட்டையை எவனோ வழியில் போட்டிருக்கிறான்!’’ என்று திட்டிக் கொண்டே சென்றான்.
வழிபோக்கனுக்கு உடனே கோபம் வந்துவிட்டது. எழுந்தான்.
‘கட்டை எங்காவது பேசுமா?’ என்றான்.
திருடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள். முன்கோபம் கொண்ட வழிப்போக்கனைத் தாக்கினார்கள்.
அவனிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றார்கள்.
அப்போது ஒரு திருடன் சந்தேகத்துடன், ‘இந்தப் பையத்திக்காரனிடம் பணம் பறித்தோமே! அது செல்லுமா?’ என்று தன்னுடன் இருந்த திருடர்களிடம் கேட்டான்.
அதைக் கேட்டதும் மறுபடியும் வழிப்போக்கனுக்குக் கோபம் வந்துவிட்டது.
அவன், ‘‘என்னுடைய பணமா செல்லாது? உங்களுக்குச் சந்தேகங்கள் இருந்தால் செடி மறைவில் படுத்திருக்கும் வியாபாரியை எழுப்பிக் கேளுங்கள்’’ எனக் காட்டிக் கொடுத்தான்.
திருடர்களுக்கு ஒரே வியப்பு! பிறகு அவர்கள் செடி மறைவில் இருந்த வணிகனை எழுப்பி அவனிடமிருந்த பணத்தையும் பிடுங்கிச் சென்றார்கள்.
முன்கோபக்காரனோடும், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம் உடையவனோடும் ஏற்படும் உறவு தீமையைத்தான் தரும்.
எனவே, யாரிடம் பழக வேண்டும் என்று புரிந்து செயல்பட வேண்டும். சேரிடம் அறிந்து சேர வேண்டும்.